அஸ்வசும நலன்புரி; நன்மைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை எந்த மட்டத்தில் உள்ள எவரும் சமர்ப்பிக்க முடியும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நலன்புரிப் பலன்களை வழங்குவதற்கான அளவுகோல்களுக்கு உட்பட்டு பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு சலுகைகளுக்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்யும் முறையின் கீழ் அனைத்து விண்ணப்பங்களும் சமமாகப் பரிசீலிக்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதன்படி, அவர்கள் பெறும் புள்ளிகளுக்கு ஏற்ப தகுதித்தேர்வு நடத்தப்படும் என்றார். இந்நிவாரணத் திட்டத்திற்கு மாகாண சபைப் பிரதிநிதிகளை உள்வாங்குவதற்காக அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நிதி அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மாகாண ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சமூக நலச் செயற்பாட்டிற்கு மிகவும் முனைப்புடன் பங்களிக்கும் மாகாண சபைகளின் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெறுவதன் மூலம், இரண்டாவது கட்டத்தில் மிகவும் பொருத்தமானவர்களை உள்வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகும் என்று அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
குறிப்பாக சமூக சேவைகள் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் மாகாண சபைகளில் இருப்பதாகவும் அவர்களின் தலையீட்டின் ஊடாக இரண்டாம் கட்டத்திற்கு மிகவும் தகுதியான பயனாளர்களின் பட்டியலை தயாரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
முதல் கட்டத்தில் ஏற்பட்ட சில குறைபாடுகளை; சீர்செய்து இரண்டாம் கட்டத்தின் கீழ் 2.4 மில்லியன் பேர் இந்த பலன்களைப் பெற தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், நலன்புரிச் செயற்பாட்டில் இணைத்துக் கொள்ளப்படுவது தேர்தலை இலக்காகக் கொண்ட அரசியல் செயற்பாடாகும் என்ற சில குற்றச்சாட்டுகளை நிராகரித்த அமைச்சர், எந்தவொரு அரசியல்வாதியும், நலன்புரிச் சபையின் நிர்வாக சபை உறுப்பினர்களும் கூட, இதில் தலையிட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்று (15) முதல் ஆரம்பமாகும் என்பதுடன், ஜூலை மாதம் முதல் உதவித்தொகை வழங்கும்; பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர். அஸ்வசும நலன்புரி; நன்மைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக 205 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
90 வீதமான ஆட்சேபனைகள் மற்றும் மேல்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இதுவரை உதவித்தொகை பெற தகுதியுடைய 9,122 பேர் தகுதியற்றவர்களாக மாறியுள்ளனர் என்றும் அவர் கூறினார். பொய்யான தகவல்களின் அடிப்படையில் எந்தவொரு தரப்பினரும் நன்மைகளைப் பெற்றிருந்தால், அவை மீளப்பெறப்படும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
கீழுள்ள இணைப்பினூடாக, இதற்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.