போபால்: மத்திய பிரதேச அரசியலில் கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத்தும் அவரது மகன் நகுல் நாத்தும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக.வில் இணைவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்களவை தேர்தல் தேதிகள்விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ தினேஷ் அஹிர்வர் மற்றும் விதிஷா காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராகேஷ் கதாரே ஆகிய இருவரும் கடந்த 12-ம் தேதி பாஜக.வில் இணைந்தனர்.
முன்னதாக பாஜக மாநில தலைவர் வி.டி.சர்மா கூறியதாவது: ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் புறக்கணித்தனர். அதில் ம.பி. காங்கிரஸ் தலைவர்கள் பலர் வேதனை அடைந்துள்ளனர். அவர்களில் பலர் பாஜக.வில் இணைய விரும்புகின்றனர். பாஜக.வின் கொள்கை, சித்தாந்தங்கள், தலைவர்களை ஏற்பவர்கள் யாராக இருந்தாலும், தாராளமாக வரலாம். அவர்களுக்காக பாஜக.வின் கதவு திறந்தே இருக்கும்.
இவ்வாறு சர்மா கூறினார்.
காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத் பாஜகவில் இணைவாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘தற்போதைய சூழ்நிலையை நான் சொல்கிறேன். ராமரை காங்கிரஸ் புறக்கணித்ததால் காங்கிரஸ் தலைவர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களுக்காக பாஜக கதவு திறந்திருக்கிறது. இந்தியாவின் இதயத்தில் ராமர் இருக்கிறார். ராமரை காங்கிரஸ் அவமதிக்கும் போது, அவரை நம்பும் மக்கள் வேதனை அடைகிறார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும்’’ என்று சர்மா கூறினார்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் நேற்று காலை அவசரமாக டெல்லி சென்றார். அங்கு பாஜக தலைவர்களைச் சந்தித்து பேசுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், கமல்நாத்தின் மகன் நகுல் நாத், தனது வலைதளப் பக்கங்களில் இருந்து ‘காங்கிரஸ்’ என்ற வார்த்தையை நீக்கி உள்ளார். இதுவும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தந்தை, மகன் இருவரும் பாஜக.வில் இணைய போவதாக ம.பி. மற்றும் டெல்லியில் பரபரப்பாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ம.பி.யின் சிந்த்வாரா மக்களவை தொகுதி கமல்நாத் குடும்பத்தின் கோட்டையாக உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ம.பி.யில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் பாஜக 28 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், சிந்த்வாரா மக்களவை தொகுதியில் மட்டும் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் வெற்றி பெற்றார். அந்தளவுக்கு சிந்த்வாரா தொகுதியில் கமல்நாத்துக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது.
இந்நிலையில், ‘‘வரும் மக்களவை தேர்தலிலும் சிந்த்வாரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நான்தான்’’ என்று நகுல்நாத் தானாகவே அறிவித்தார். கட்சி மேலிடம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், நகுல்நாத்தின் இந்த அறிவிப்பு கட்சி மேலிடத் தலைவர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. அதை மேலும் அதிகரிக்கும் வகையில், தனது சமூக வலைதளப் பக்கங்களில் காங்கிரஸ் என்ற பெயரை நகுல்நாத் நீக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.