சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி தி.மு.க சார்பில், கடலூர் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரி மாநில தி.மு.க அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பஞ்சு மிட்டாயில் கலக்கப்பட்ட வண்ண கலவை, புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்து புதுவை அரசு தடை விதித்தது. அந்த செய்தியை பார்த்த பிறகு, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தினோம்.

அப்போது, அதில் புற்றுநோய் பாதிப்பை உண்டாக்கும் வேதி கலவை இருப்பது கண்டறியப்பட்டது. உடனே தமிழக முதல்வர் அறிவுறுத்தலோடு வண்ண கலவை இருக்கிற பஞ்சு மிட்டாய்க்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெண்மை நிறுத்தில் உள்ள பஞ்சு மிட்டாய் விற்பதற்கு தடையில்லை” என்றவரிடம், `திராவிட மாடல் ஆட்சி பிரிவினையை ஏற்படுத்துகிறது’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறாரே?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், “அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குவதைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அதே அமைச்சர்தான், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஏன் காலதாமதம் என்று நாடாளுமன்றத்தில் கேட்டபோது, தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்து தரவில்லை என்று தெரிவித்தார்.
அவர்களுக்கு அன்றைய தினமே நான் பதிலளித்துவிட்டேன். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 2019-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதற்காக அவரை அடிக்கல் நாட்ட அழைத்து வந்தவர் எடப்பாடி பழனிசாமி. நில ஆர்ஜிதம் செய்யப்படாத, யாருக்கோ சொந்தமான இடத்தில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரதமர் எப்படி அடிக்கல் நாட்டுவார் ? அல்லது வேறு யாருக்கோ சொந்தமான இடத்தில் அடிக்கல் நாட்டுவதற்கு, ஒரு மாநில முதல்வர் நாட்டின் பிரதமரை எப்படி அழைத்து வருவார் ? நில ஆர்ஜிதம் செய்யாமல், அந்த இடத்தில் அடிக்கல் நாட்டியதாக இருந்தால், முதல் குற்றவாளி எடப்பாடி பழனிசாமி. அது தெரியாமல் பிரதமர் அங்கு அடிக்கல் நாட்டி இருந்தால், அவரும் தவறுக்கு உரியவர் ஆகிறார். ஜெய்காவில் நிதியை பெற்றுத் தருவதில் உள்ள சிக்கல்தான், எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு காரணம் என்று உண்மையை சொல்லி இருக்கலாம். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கெல்லாம், ஒன்றிய அரசின் நிதி ஆதாரம்தான். ஆனால் தமிழ்நாட்டுக்கு என்ன காரணத்தாலோ, ஜெய்காவின் நிதி ஆதாரத்துடன் கட்டுவது என்று முடிவெடுக்கிறார்கள்.

அந்த உண்மையான காரணத்தை கூறாமல், நில ஆர்ஜிதம் செய்யப்படவில்லை என்றார் அந்த அமைச்சர். அதற்கான அனைத்து ஆதாரங்களும் 2020-ம் ஆண்டு ஒன்றிய அரசுக்கு ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. 2019-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 224 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டதும், அந்த நிலத்திற்குரிய ஆவணங்கள் அனைத்தும் 2020 நவம்பர் 3-ம் தேதி ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. இவ்வளவு நடந்த பிறகும், கடந்த 2023-ம் ஆண்டு உயரிய பொறுப்பில் இருக்கும் மத்திய நிதியமைச்சர், தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்து தரவில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறுகிறார். இப்படி தெரிந்தே பொய் சொல்பவர்கள், இந்த விவகாரத்திலும் அப்படித்தான் பொய் சொல்வார்கள்” என்றார். தொடர்ந்து `நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடப் போவது யார்?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் அதுகுறித்து முடிவெடுப்பார்” என்றார்.