ராஜ்கோட்: ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது முதல் இரு தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. 3வது டெஸ்ட் குஜராத்தின் ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 445 ரன்களும், இங்கிலாந்து 319 ரன்களும் எடுத்தன. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து இருந்தது.
இரட்டை சதம்
4ம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில், 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் எடுத்து இருந்தபோது டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் அடித்தார். சர்பராஸ் கான் 68 ரன்கள் எடுத்து இருந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
சரிவு
இதற்கு பிறகு கடினமான இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து படுதோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக பந்துவீச்சாளர் மார்க் உட் 33 ரன் எடுத்தார். டாம் ஹார்ட்லி, பென் போக்ஸ் தலா 16 ரன், பென் ஸ்டோக்ஸ் 15, க்ராளே 11, ஜோ ரூட் 7 பெயிர்ஸ்டாவ் மற்றும் பென் டக்கெட் தலா 4 ரன் எடுத்தனர். ஜடேஜா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, குல்தீப், அஸ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர் இதன் மூலம் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement