வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கிளாம்பாக்கம் பஸ் நிலைய விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றத்திற்கு சென்று முறையிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் இருந்து தான் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களும் இயக்கப்பட வேண்டும் என கடந்த ஜனவரி 24ம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஆம்னி பஸ் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டது. இதனிடையே, கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பஸ்களை இயக்க அனுமதி கோரி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று (பிப்.,19) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த விவகாரத்தில் தலையிட மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அவர்கள் விசாரித்து முடிக்கட்டும்; அதற்குள் உச்சநீதிமன்றம் ஏன் தலையிட வேண்டும்?’ என கேள்வி எழுப்பியது.
மேலும், ‘ஏதாவது கோரிக்கை வைக்க வேண்டுமென்றால் தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது முன் வைக்கலாம்’ எனவும் அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement