நடிகர் சூர்யா தற்போது `கங்குவா’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் களமிறங்கியிருக்கிறார்.
இதன் பிறகு ‘வாடிவாசல்’, சுதா கொங்கராவின் ‘புறநானூறு’ எனப் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். இதுமட்டுமின்றி இவர் பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவுடன் இணையப் போகிறார் என்ற தகவல் ஏற்கெனவே பேசப்பட்டது. மகாபாரதத்தைத் தழுவி இத்திரைப்படம் உருவாகவுள்ளதாகவும், இத்திரைப்படத்திற்கு ‘கர்ணா’ என்கிற தலைப்பை வைக்கவிருப்பதாகவும் அதில் நடிகை ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பேசப்பட்டது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது தயாரிப்பாளரும் ஜான்வி கபூரின் தந்தையுமான போனி கபூர் பேசியிருக்கிறார். நடிகர் சூர்யா இந்தியில் நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்து போனி கபூர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
பேட்டியில் தனது மகளான ஜான்வி கபூர் நடிக்கும் தென் இந்தியத் திரைப்படங்கள் குறித்துப் பேசிய அவர், “ஜான்வி அடுத்ததாக சூர்யாவுடன் ஓர் இந்தி படத்தில் நடிக்க உள்ளார்” எனப் பகிர்ந்திருக்கிறார். இதை வைத்து, “நடிகர் சூர்யா பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷுடன் இணையும் படத்தில்தான் ஜான்வி நடிக்கிறார்” என ரசிகர்கள் சமூல வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் பேசிய தயாரிப்பாளர் போனி கபூர், “ஜான்வி தற்போது நடிகர் ஜுனியர் என்.டி,ஆருடன் ‘தேவாரா’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதற்கு பின்பு நடிகர் ராம் சரணுடன் நடிக்கிறார். எனது மனைவி (ஶ்ரீதேவி) பல மொழி படங்களில் நடித்தார். அது போலவே எனது மகளும் பல மொழி படங்களில் நடிப்பார்” எனவும் கூறினார்.

சமீபத்தில், ஆனந்த விகடன் யூட்யூப் சேனலுக்கு எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் அளித்தப் பேட்டியில், “மகாபாரதத்தை மையப்படுத்தி இந்தியில் ஒரு திரைப்படத்தை பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கவிருக்கிறார். அதில் பிரபல தென்னிந்திய நடிகர் ஒருவரை நடிக்க வைப்பதற்குப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும்” எனக் கூறியிருந்தார். எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் மகாபாரதத்தை மையப்படுத்திய புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்பதும், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் படத்திற்கு அவர்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது.