வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 341 அரசு துவக்கப்பள்ளிகளில் ஒரே வகுப்பறை, ஒரே ஆசிரியருடன் இயங்கி வருகிறது. என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ இது சம்பந்தமாக கேள்வி எழுப்பினார். அதற்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ள கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து இருப்பதாவது: 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரையில் மாநிலம் முழுவதும் உள்ள 341 அரசு துவக்கப்பள்ளிகளில் ஒரு வகுப்பறையோடு இயங்கி வருகிறது. இதற்கு காரணம் பள்ளிக்குழந்தைகள் எண்ணிக்கை குறைவு, ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவு, அறைகள் பாழடைந்து காணப்படுவது மற்றும் பள்ளி விரிவாக்கத்திற்கு நிலம் கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.
அதே நேரத்தில் மாநில அரசு கல்வித்துறைக்கு ரூ.43 ஆயிரத்து 651 கோடி ஒதுக்கி உள்ளது. ஒன்றாம் வகுப்பு ஆசிரியருக்கான 140 பணியிடங்களில் 107 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மேலும் 982 அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் தற்போது வரையில் 542 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. 440 இடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 -ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே ஒரு ஆசிரியரை கொண்டு இயங்குவதாக கடந்த 12 ம் தேதி சட்டசபையில் அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து காங்., செய்தி தொடர்பாளர் ஹிரேன் பேங்கர் கூறுகையில் ஒரு புறம் ஆசிரியர்கள் இல்லை என்று அரசு கூறுகிறது. மறுபுறம் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது கல்வியை தனியார் மயமாக்குவதையும், மாணவர்களை விட வணிகர்களுக்கு நன்மை செய்வதையும் அரசு விரும்புகிறது. என கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement