வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: திருமணம் ஆனதால் ராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் நர்சுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்திய ராணுவத்தில் நர்சாக செலினா ஜான் என்ற பெண் பணியாற்றி வந்தார். லெப்டினன்ட் அந்தஸ்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த 1988 ம் ஆண்டு திருமணம் ஆனதால் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து, அவர் கடந்த 2012 ம் ஆண்டு ராணுவ தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தீர்ப்பாயம், பணி நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது. ஆனால், 2019ல் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு, திருமணத்தின் அடிப்படையில் ஒரு பெண்ணை பணி நீக்கம் செய்வது என்பது பாலின பாகுபாட்டின் மோசமான நிலை. பாலின சார்பு அடிப்படையில் எந்த ஒரு சட்டமும் அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்படாது. தீர்ப்பாயத்தின் உத்தரவில் தலையிட தேவையில்லை. திருமணத்தை காரணம் காட்டி ராணுவ நர்ஸ் சேவையில் இருந்து பெண்களை பணியில் இருந்து நீக்குவதற்காக 1977 ல் கொண்டு வரப்பட்ட சட்டம் 1995ம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது எனக்கூறியதுடன், செலினா ஜானுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement