பெங்களூரு:“தேவையானவர்களுக்கு மட்டுமே இலவச வாக்குறுதிகளை அளித்திருக்க வேண்டும். ஆனால், நீங்கள் அனைவருக்கும் அளித்தது ஏன்?,” என, பா.ஜ., உறுப்பினர் பிரதாப் சிம்ஹா நாயக் கேள்வி எழுப்பினார்.
சட்ட மேலவையில் நேற்று நடந்த விவாதம்:
பா.ஜ., – பிரதாப் சிம்ஹா நாயக்: மாநிலத்தில் வாக்குறுதித் திட்டம் அறிவிப்பது குறித்து மத்திய அரசிடம் கேட்கவில்லை. தற்போது மாநிலத்தில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிக்கு, மத்திய அரசு தான் காரணம் என கூறுகின்றனர்.
வாக்குறுதித் திட்டங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், இலவச அரிசி அனைவருக்கும் தேவையில்லை. தேவை உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.
அதுபோன்று இலவச பஸ் பயணம், மின்சாரம், மகளிருக்கு 2,000 ரூபாய் அனைவருக்கும் அளித்திருக்கக் கூடாது. தேவையானவர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும். ஆனால் அரசோ, அனைவருக்கும் வாக்குறுதித் திட்டங்களை கொடுத்து உள்ளது.
யார் அரிசி கொடுக்கின்றனர் என்பது மக்களுக்கு தெரிவதில்லை.
மத்திய அரசு வழங்கும் ஐந்து கிலோ அரிசியுடன், மாநில அரசு ஐந்து கிலோ அரிசி வழங்குகிறது. ஆனால், இதிலும் கூட மாநில அரசு, ஐந்து கிலோ அரிசி வழங்கவில்லை.
மத்திய அரசு நிதி தரவில்லை என்று கூறி வருகின்றனர். 15வது நிதி கமிஷன் அமைத்தபோது, கர்நாடகாவில் ம.ஜ.த., – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தது. அப்போது ஏன் கேட்கவில்லை? இப்போது அமைச்சர்களாக உள்ள ஐந்தாறு பேர், கூட்டணி ஆட்சியிலும் இருந்தனர். அப்போது ஏன் பேசவில்லை?
ஜவுளி துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல்: பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தபோது, பத்ரா மேலணை திட்டத்துக்கு மத்தியில் இருந்து நிதி கொண்டு வருவேன் என்று கூறினார். ஆனால் அத்திட்டத்தை அமலுக்கு கொண்டு வரவில்லை.
பிரதாப் சிம்ஹா நாயக்: மாநில அரசு செய்ய வேண்டியதை செய்யவில்லை என நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
(அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்)
பிரதாப் சிம்ஹா நாயக்: உண்மையை கூறியதை ஜீரணிக்க முடியாமல், என் பேச்சில் தலையிட்டு ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். உண்மைக்கு புறம்பாக நான் எதையும் பேசவில்லை.
கொரோனா நேரத்தில் மத்திய அரசு மானியம் வழங்கியது. நிலுவை தொகை அல்ல. ஜி.எஸ்.டி., இழப்பீட்டுத் தொகை கடனாக வழங்கப்படுகிறது. கடனை மத்திய அரசு செலுத்த வேண்டுமே தவிர, மாநில அரசு அல்ல. தேசிய நெடுஞ்சாலை, துறைமுகம், விமான நிலையம் அமைத்தது யார்? மத்திய அரசிடம் இருந்து வந்தது.
மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த கொடுக்கப்படும் உத்தரவாதம் மூலதன செலவில் வருமா அல்லது வருவாய் செலவில் வருமா?
அமைச்சர் எம்.பி.பாட்டீல்: விமான நிலையம், மெட்ரோ ரயில், விமான நிலைய முனையம் ஆகியவற்றில் மாநிலத்தின் பங்கு உள்ளது. அதில், 75 சதவீதம் மாநில அரசு வழங்குகிறது.
மங்களூரு சர்வதேச விமான நிலைய பராமரிப்பு, அதானிக்கு வழங்கப்பட்டு உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி: அதானிக்கு கொடுத்ததால், விமான நிலையத்துக்கு செல்வோர் நின்று விட்டார்களா? மக்கள் சென்று கொண்டு தான் இருக்கின்றனர். ஷிவமொகாவில் விமான நிலையத்தை கொண்டு வந்தது நாங்கள் இல்லையா?
அப்போது அமைச்சர் எம்.பி.பாட்டீல் மறுத்து, “இது மாநில அரசின் திட்டம்,” என்றார்.
அப்போது உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்ட மேலவை துணைத்தலைவர் பிரானேஷ் குறுக்கிட்டு, “இது தொடர்பாக அரசு சார்பில் விளக்கம் அளிக்க வேண்டும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்