மாசிமகத்திருவிழா: புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரி,

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமகத்தன்று தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் மயிலம் முருகர், செஞ்சி ரங்கநாதர், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் கலந்துகொள்வார்கள்.

அதன்படி நேற்று முதலே உற்சவர் சிலைகள் புதுச்சேரிக்கு வந்த வண்ணம் உள்ளன. அவற்றுக்கு புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாசி மகத்தன்று கடற்கரையில் ஒரே நேரத்தில் எழுந்தருளும் உற்சவமூா்த்திகளைத் தரிசிக்க ஆயிரக்கணக்கில் பக்தா்கள் திரள்வா். இதேபோன்று திருக்காஞ்சியிலும் மாசி மகம் தீா்த்தவாரி உற்சவம் நடைபெறும். மாசி மகத்தன்று, விழுப்புரம், கடலூா் பகுதியிலிருந்தும் கோவில்களின் உற்சவா்கள் புதுச்சேரிக்கு வருவதால் போக்குவரத்தை சீரமைக்கவும், கூடுதல் பாதுகாப்பை மேற்கொள்ளவும் அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது வழக்கம்.

இந்நிலையில் மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் சி.பி.எஸ்.இ. தேர்வுகள், அரசு செய்முறை தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் பிரியதர்ஷிணி தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.