“என் பல வருட ஆசை நிறைவேறியது” – கடலுக்கடியில் மூழ்கிய துவாரகாவில் வழிபாடு; பிரதமர் மோடி நெகிழ்ச்சி

துவாரகா: “என் பல வருட ஆசை நிறைவேறியது” என்று கடலுக்குள் மூழ்கியதாக கூறப்படும் துவாரகாவில் வழிபட்டது குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் துவாரகாவில் ரூ.4150 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக் கிழமை) அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஓகா நிலப்பரப்பையும் பேட் துவாரகாவையும் இணைக்கும் சுதர்சன் சேது பாலம், வடினார் மற்றும் ராஜ்கோட் – ஓகா, ராஜ்கோட் – ஜெட்டல்சர்- சோம்நாத் மற்றும் ஜெட்டல்சார் – வான்ஸ்ஜாலியா ரயில் மின்மயமாக்கல் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அதேபோல், தேசிய நெடுஞ்சாலை-927ன் தோராஜி-ஜம்கண்டோர்னா – கலவாட் பகுதியை அகலப்படுத்துவதற்கும், ஜாம்நகரில் உள்ள பிராந்திய அறிவியல் மையம் மற்றும் ஜாம்நகரில் உள்ள சிக்கா அனல் மின் நிலையத்தில் வெளியேறும் உமிழ்வுகளிலிருந்து கந்தகக் கலவைகளை அகற்றும் செயல்முறை அமைப்பு நிறுவலுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

ஸ்கூபா டைவிங்: முன்னதாக, கடலுக்குள் மூழ்கியதாக கூறப்படும் துவாரகா நகருக்கு சென்று பூஜை செய்ய விரும்பிய பிரதமர் மோடி, இன்று ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் படகில் அரபிக்கடலுக்குள் பயணித்தார். துவாரகா நகரை உருவாக்கியவராக நம்பப்படும் கடவுள் கிருஷ்ணருக்கு மயிலிறகு விருப்பமான ஒன்று, காவி உடை அணிந்து தனது கையில் மயிலறகுடன் ‛ஸ்கூபா டைவிங்’ கருவிகளை உடலில் பொருத்திக் கொண்டு பிரதமர் மோடி கடலுக்கடியில் சென்று தரிசனம் செய்தார். அவருக்கு பாதுகாப்பாக பிற ஸ்கூபா டைவிங் வீரர்கள் உடன் சென்றனர்.

ஆழ்கடலின் தரைப்பகுதிக்குள் சென்ற பிரதமர் மோடி அங்கு தான் கொண்டு சென்ற மயிலறகை தரையில் வைத்து சிறப்பு பூஜை செய்தார். அதன்பின் தரைப்பகுதியை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி கடலில் இருந்து வெளியே வந்தார். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.

நீரில் மூழ்கிய துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்த மறக்க முடியாத தருணம் குறித்து அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பேசினார். அந்தக் கோயிலின் தொல்லியல் மற்றும் வேத முக்கியத்துவம் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். அதில், “துவாரகா பகவான் விஸ்வகர்மாவால் கட்டப்பட்டது என்பது நம்பிக்கை. துவாரகா நகரம், சிறந்த நகரத் திட்டமிடலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. நீரில் மூழ்கிய நகரத்துக்குள் இறங்கியதும் தெய்வீகத்தின் பேராற்றல் ஆட்கொண்டது. பிரார்த்தனை செய்தேன், என்னுடன் எடுத்துச் சென்ற மயில் இறகுகளை வழங்கினேன்.

நீரில் மூழ்கிய துவாரகா நகரத்தைப் பற்றி நான் கேள்விப்பட்ட காலத்திலிருந்து, அங்கு சென்று தரிசனம் செய்ய விரும்பினேன். பல வருடங்களாக இருந்த என் ஆசை நிறைவேறியது.” இவ்வாறு தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.