554 ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்; பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

விசாகப்பட்டினம்,

இந்திய ரெயில்வேயில் உலக தரத்திலான வசதிகள் உள்பட பல்வேறு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, இந்திய ரெயில்வேயின் 554 ரெயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணிகளுக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி 26-ந்தேதி (நாளை) நாட்டுகிறார்.

இதுபற்றி இந்திய ரெயில்வேயின் ஆந்திர பிரதேச மாநிலத்திற்குட்பட்ட வால்டேர் மண்டல ரெயில்வே மேலாளரான சவுரப் பிரசாத் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, மறுசீரமைப்புக்கான 554 ரெயில்வே நிலையங்களில் 12 நிலையங்கள் வால்டேர் மண்டலத்தில் வருபவை. இவற்றில் புதிய கட்டிடங்கள், உலக தரத்திலான வசதிகள், 12 மீட்டர் அகல நடைமேம்பாலங்கள் மற்றும் 2-வது நுழைவாயில் ஆகியவை கிடைக்க பெறும் என கூறினார். இதற்காக ரூ.443 கோடி செலவிடப்படும்.

இந்த ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தவிர, 4 இடங்களில் ரெயில்வே லெவல் கிராசிங் நுழைவாயில்கள், சாலை மேம்பாலங்களாக மாற்றம் செய்யும் பணிகளும் நடைபெறும். அவை ரூ.218 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

இவற்றில் அம்ரித் பாரத் ரெயில் நிலையங்களும் மறுசீரமைப்பு பணிக்கு உட்படுத்தப்படும். அம்ரித் பாரத் ரெயில்கள் ஆனது, சிறந்த ரெயில் நிலைய வசதிகள், ஏ.சி., அகலம் வாய்ந்த நடை மேம்பாலங்கள், காத்திருப்பு பகுதிகள், கழிவறை வசதிகள், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் மற்றும் தூய்மை ஆகியவற்றை பெற்றிருக்கும்.

இந்த மறுசீரமைப்புக்கான நிலையத்தில், இலவச வைபை, ஒரே ரெயில் நிலையம் ஒரே பொருள் என்ற தொடக்க திட்டத்தின் கீழ் கடைகள், மேம்படுத்தப்பட்ட பயணிகள் தகவல் சாதனங்கள், வர்த்தக கூட்டங்கள் நடத்துவதற்கான அரங்கங்கள் உள்ளிட்டவையும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.