கருப்பண்ணசாமியும் நானும் : பக்தி பரவசத்தில் நடிகை நளினி

தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் மனதை நடிப்பால் கிறங்க வைத்த மிடுக்கான நடை, காந்தகண்கள், அழகான நளின சிரிப்புக்கு சொந்தக்காரர் நளினி. ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடித்து 96 படங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்தவர். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக இருக்கிறார். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். நடிகர் ராமராஜனை மணந்ததால் மதுரை மண்ணின் கோயில்களின் பெருமைகளை அறிந்து வைத்திருக்கிறார். மதுரை வந்த அவர் மதுரையில் அவரது ஆன்மிகம் பயணம் பற்றி கூறியது:

அழகர்கோவிலில் உள்ள கருப்பண்ணசாமி பெயரை கேட்டாலே இப்பொழுதும் எனக்கு உடல் சிலிர்த்து விடும். திருமணத்திற்கு பின் குலதெய்வ வழிபாட்டிற்காக என்னை அழைத்து சென்றனர். கோயில் முன்பு நின்ற பொழுது அதன் பிரமாண்டத்தைப் பார்த்தபொழுது அவர் மேல் எனக்கு பெரிய ஈர்ப்பு வந்தது.

பின்னர் என் மனம் சஞ்சலம் அடையும் போதெல்லாம் நேராக சென்று அவரை பார்த்துவிடுவேன். ஐயனே நேரில் வந்து எனக்கு 'மெஸேஜ்' சொல்வது போல் இருக்கும். அவரை பார்த்துட்டு வந்தாலே ஒரு தேஜஸ் இருக்கும். கருப்பண்ணசாமி என்று சொன்னாலே என் கூட வந்து நின்றுவிடுவார். என் வாழ்வில் நிறைய அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.

ஒரு முறை நான் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடப்பது போல் இருந்தது. உடனே 'கருப்பா' என்று நினைத்தவுடன் அந்த ஆபத்தில் தப்பினேன். எதிரே பார்த்தால் கருப்பசாமி என்ற பெயருடன் லாரி ஒன்று சென்றது. இதையெல்லாம் சொன்னால் யாரும் நம்புவார்களா என்பது கூட எனக்கு தெரியாது. கருப்பண்ணசாமி எனக்கு வேற லெவல்.

மதுரைக்கு வந்தால் நான் எப்படி அழகர்கோயிலுக்கு செல்வேன் என்றே எனக்கு தெரியாது. அவர் முன் நின்று கண்கலங்குவேன்; அவ்வளவு தான் தெரியும். அதேபோல் பாண்டிகோயில் முனியும் எனக்கு பிடிக்கும். எனக்கு குலசாமி போல். இன்றுவரை என்கூடவே இந்த இரு தெய்வங்களும் இருப்பதாக உணர்கிறேன்.

திருவிழா போன்ற முக்கிய நிகழ்ச்சியின் போது போகமாட்டேன். கூட்டமில்லாத போது வந்து செல்வேன். அப்போதுதான் நானும் சாமியும் பேசிக்கொள்ள முடியும். ஒரு முறை முதுமலைக்கு சென்ற போது, காட்டுப்பகுதியில் எங்கள் வாகனம் பழுதாகி விட்டது. அந்த வழி செல்வோர் இங்கு யானை, புலி வரும் என பயமுறுத்தினர். நான் கருப்பா என வணங்கியபோது எங்கள் முன் கருப்பணசாமி என்ற பெயரில் ஒரு பஸ் சென்றது. அப்போது என் அப்பன் கருப்பன் நம்கூடவே வருவார் என்றேன். அங்கு நடந்து வந்த இருவர் எங்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவினர். அவர்கள் பெயரை கேட்டோம்; அதில் ஒருவர் கருப்பசாமி என்றார். இப்படி அந்த தெய்வம் ஏதோ ஒருவகையில் என்னை காத்து வருகிறார்.

மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயில் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த சிவன் முன் உட்கார்ந்து விடுவேன். என் அப்பா, அம்மாவை பார்ப்பது போல் இருக்கும். அப்புறம் கூடலழகர் பெருமாள், என்னை உயரத்திற்கு கொண்டு சென்றவர். பின் மடப்புரம் காளி… நான் அங்கு செல்லவில்லையென்றால் என்னை கூப்பிடுவாள் ஏன் வரவில்லை என்று.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அதிகாலை விஸ்வரூபதரிசனத்திற்கு செல்வேன். அம்மன் முன் அமர்ந்து கண்ணீர் மல்க தரிசனம் செய்வது பிடிக்கும். 14 வருடமாக இந்த தரிசனத்திற்கு ஒரு முறையாவது சென்றுவிடுவேன். அன்னை மீனாட்சியால்தான் என் குழந்தைகள் நன்றாக படித்தார்கள்.

சினிமா சூட்டிங் செல்லும் இடங்களில் கோயில் இருந்தால் எனது தாய் அழைத்து சென்றுவிடுவார். அப்படித்தான் எங்கு போனாலும் கோயில் செல்லும் பழக்கம் ஏற்பட்டது. அவர் காட்டிய ஆன்மிக வழியில் நானும் இப்பொழுது சென்று கொண்டிருக்கிறேன் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.