சின்மயி – டப்பிங் யூனியன் சண்டை; பிரச்னைக்கு முடிவு கட்டிய லோகேஷ் கனகராஜ்!

‘சின்மயி சொன்ன ஒரு பொய்யால டப்பிங் யூனியனுக்கு சில லட்சங்கள் வீண் செலவு’ என்ற தலைப்பில் சில தினங்களுக்கு முன் விகடன் தளத்தில் கட்டுரை வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.

டப்பிங் யூனியனில் துணைத் தலைவராக இருந்தவரும் அந்த யூனியனுக்கு விரைவில் நடக்கவிருக்கும் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவருமான ராஜேந்திரனிடம் பேசி வெளியான கட்டுரை அது.

பேட்டியில் ராஜேந்திரன், டப்பிங் யூனியனில் நடந்த சில பிரச்னைகளுக்கு யார் காரணம் என விளக்கிப் பேசியிருந்தார். அப்போது, சின்மயிக்கும் டப்பிங் யூனியனுக்குமிடையிலான பிரச்னை குறித்தும் விரிவாகப் பேசியிருந்தார்.

‘சின்மயி சாதாரண உறுப்பினராக யூனியனில் சேர்ந்தாங்க. சந்தாவைப் புதுப்பிக்கச் சொன்ன போது ‘நான் லைஃப் மெம்பர்; சந்தா புதுப்பிக்கத் தேவையில்லை’னு சொன்னாங்க. அவர் சந்தா செலுத்தாதால் உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப் பட, விவகாரம் கோர்ட்டுக்குப் போனது. வழக்கின் இறுதியில் சங்க நடவடிக்கை சரியேன்னு கோர்ட்ல தீர்ப்பு வந்திடுச்சு.

சின்மயி சொன்ன ஒரு பொய்யால யூனியனுக்கு வழக்கு நடத்திய வகையில சில லட்சங்கள் செலவானதுதான் மிச்சம். எல்லாம் உறுப்பினர்கள் பணம். இப்ப சங்கத்துல உறுப்பினரா இல்லாத சின்மயியை சினிமாவுல டப்பிங் பேசக் கூப்பிடக் கூடாதுங்கிறதுதான் யூனியன் விதி. ஆனா ‘லியோ’ படத்துல அவங்க த்ரிஷாவுக்கு டப்பிங் பேசியிருக்காங்க.

டப்பிங் யூனியன் ராஜேந்திரன் சின்மயி

லோகேஷ் கனகராஜ் பேசுங்க பாத்துக்கலாம்னு சொன்னதா சொல்றாங்க. கோர்ட் தீர்ப்பு வந்த பிறகு சின்மயி யூனியனுக்கு வந்து திரும்ப உறுப்பினராச் சேர்ந்திருக்கலாம். அதையும் அவங்க பண்ணலை. யூனியன்ல உறுப்பினராக இல்லாதவங்களை அவங்க குரலுக்காக பயன்படுத்தணும்னு நினைச்சா தயாரிப்பாளர் தரப்பு ஒரு குறிப்பிட்ட தொகையை யூனியனுக்குச் செலுத்தி குறிப்பிட்ட படத்துக்கு மட்டும் அவங்களைப் பயன்படுத்தலாம்னு ஒரு விதி இருக்கு. அதையாவது லியோ குழு செய்திருக்கலாம். அதையும் பண்ணலை. லோகேஷ் கனகராஜ் பேசியதுமே தவறானது ஒருவேளை தலைவராக நான் தேர்வானால் இது மாதிரியான விவகாரங்கள்ல நிலையான தெளிவான ஒரு முடிவு எடுக்கப்படும்’ எனப் பேசியிருந்தார் அவர்.

ராஜேந்திரனின் இந்தப் பேட்டி விகடன் தளத்திலும் சினிமா விகடன் யூ டியூப் சேனலிலும் வெளியாகி சில தினங்களே ஆன நிலையில் தற்போது, சின்மயி குரலை லியோ படத்தில் பயன்படுத்தியதற்காக ரூபாய் ஐம்பதாயிரம் பணத்தை டப்பிங் யூனியனுக்குச் செலுத்தியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இது தொடர்பாக டப்பிங் யூனியன் தரப்பில் பேசிய போது, ‘மெம்பரா இல்லாதவங்களுக்கு ஒன் டைம் பேமென்டா இந்த மாதிரி கட்டறது வழக்கம்தான். கலையரசன் ஒரு படத்துக்கு டப்பிங் பேசிய போது அவர் பணம் கட்டியிருக்கார். வேறு சிலரும் இதே மாதிரி கட்டியிருக்காங்க.

அந்த வகையில் சின்மயியைப் பேச வைத்ததற்காக இந்தப் பணம் கட்டப்பட்டிருக்கு. தயாரிப்புத் தரப்புதான் இந்தப் பணத்தைக் கட்டணும். ஆனா இந்தப் படத்துக்கு சின்மயி குரல் வேணும்னு கேட்டது லோகேஷ்தான்னு சொல்றாங்க. அதனால அவர் தர்பபுல இருந்து வந்து ஐம்பதாயிரம் கட்டியிருக்காங்க.

இதை நாங்க வரவேற்கிறோம். இதையே நல்லவொரு அறிகுறியா எடுத்துக்கிட்டு டப்பிங் யூனியனுக்கு சின்மயி திரும்பவும் வந்தாலும் வரவேற்போம்” என்கிறார்கள்.

ராஜேந்திரன்

ராஜேந்திரனிடமும் நாம் பேசினோம்.

”சின்மயி விவகாரத்துல எது நிஜமோ எது நடந்ததோ அதையே நான் பேசினேன். விகடன்ல பேசறதுக்கு முன்னாடி சங்க கூட்டத்துலயே இந்த விவகாரத்தை நான் எழுப்பியிருந்தேன். ஒரு படைப்பாளியா படத்துக்கு யார் தேவைங்கிறதை இயக்குநர் முடிவு செய்யலாம். ஆனா எல்லா கிராஃப்ட்லயுமே ஒரு யூனியன்னு வர்றப்ப அதுக்குச் சில சட்டதிட்டங்கள் இருக்கும். அதுக்குக் கட்டுப்பட்டு செயல்படுகிறதுதான் ஆரோக்கியமானதா இருக்கும். தம்பி லோகேஷ் கனகராஜ் பணம் கட்டிட்டார்னு நானும் கேள்விப்பட்டேன்.  அவருக்கு என் நன்றி” என்றார் அவர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.