சண்டிகர்: இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவர் நஃபே சிங் ரதீ கொலை வழக்கு மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஹரியாணா போலீஸார் தெரிவித்தனர்.
ஹரியாணா அரசியல் பிரமுகரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவருமான நஃபே சிங் ரதீ, அம்மாநிலத்தின் ஜஜ்ஜர் மாவட்டம் பகதுர்கர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். தனது சொகுசு காரில் சென்றபோது அடையாளம் தெரியாதவர்கள் அவரது காரை நோக்கி பல முறை சுட்டனர். இதுகுறித்து, ஜஜ்ஜரின் இணை ஆணையர் சக்தி சிங் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்பித் ஜெயின் ஆகியோர் கூறும்போது, “ஐஎன்எல்டி தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்கும்” என்று தெரிவித்தனர்.
மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயின் கூறுகையில் “இந்தக் கொலை தொடர்பாக இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், சந்தேகத்துக்குரிய நபர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்” என்றார். “கொலை தொடர்பாக சந்தேகம் உள்ள நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். எங்களுடைய ஐந்து குழுக்கள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று இணை ஆணையர் சக்தி சிங் தெரிவித்தார்.
நஃபே ரதீ சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து பல்வேறு வகையான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரைச் சுட்டுக்கொல்ல பல்வேறு வகையான ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர். முன்னதாக, மருத்துவர் ஒருவர் ரதீயின் உடலில் பல்வேறு தோட்டா காயங்கள் இருந்தன என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நஃப் சிங் ரதீ சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஹரியாணா போலீஸார் சில கும்பல்களிடம் விசாரணை செய்ய திங்கள்கிழமை டெல்லி திகார் சிறைக்குச் சென்றனர். அவர்கள் வேறு சில மாநிலங்களின் சிறைகளில் உள்ள கும்பல்களிடமும் விசாரணை நடத்தவும் உள்ளனர்.
இதனிடையே, ஐஎன்எல்டி கட்சியைச் சேர்ந்தவரும், ரதீயின் குடும்ப உறுப்பினருமான அபய் சவுதாலா குற்றவாளிகளை கைது செய்ய 7 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார். அதற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றால் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை ரதீ சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் இந்தக் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அபய் சவுதாலா என்றார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நஃபே சிங் ரதியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக 6 மாதங்களுக்கு முன்பாகவே போலீஸார் அவரிடம் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து ஜஜ்ஜர் தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, காவல் கண்காணிப்பாளர், மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் நஃபே சிங் ரதீயுடன் ஐஎன்எல்டி கட்சியைச் சேர்ந்த மற்றொருவரும் கொல்லப்பட்டார். அவரின் பாதுகாப்பு வீரர்கள் சில படுகாயமடைந்தனர்.