ஐ.பி.எல்.2024: மும்பை அணியில் தரமான ஸ்பின்னர்கள் இல்லை… ஆனால் ராஜஸ்தானில்.. – ஆகாஷ் சோப்ரா

மும்பை,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த தொடரில் வெற்றிகரமான அணியாகத் திகழும் மும்பை இந்தியன்ஸ் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக நியமித்துள்ளது. இதனால் தன்னை கேப்டனாக நியமித்த குஜராத் அணிக்கு முதல் சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்தது போல மும்பைக்கும் பாண்ட்யா சாம்பியன் கோப்பையை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் மும்பை அணியில் தரமான ஸ்பின்னர்கள் இல்லை என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு;-

“மும்பையிடம் அந்தளவுக்கு தரமான ஸ்பின்னர்கள் இல்லை. இங்கே நான் உண்மையான கருத்தை தெரிவிக்கிறேன். அவர்களிடம் சாவ்லா மற்றும் குமார் கார்த்திகேயா ஆகியோர் இருக்கின்றனர். அதேபோல சம்ஸ் முலானி போன்ற மேலும் சில இளம் வீரர்கள் இருக்கின்றனர். ஆனாலும் அவர்களுடைய சுழல் பந்து வீச்சுக் கூட்டணி பலவீனமாகவே இருக்கிறது” என்று கூறினார்.

மறுபுறம் மும்பைக்கு நேர்மாறாக ரவிச்சந்திரன் அஸ்வின், சாஹல், ஆடம் ஜாம்பா ஆகிய 3 தரமான ஸ்பின்னர்களை கொண்டிருப்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழல் பந்து வீச்சுக் கூட்டணி வலுவாக இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ஆனால் அந்த 3 ஸ்பின்னர்களையும் விளையாட வைப்பதில் ராஜஸ்தானுக்கு பிரச்சனை இருப்பதாக கூறும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு;-

“ராஜஸ்தான் அணியை இந்த அலசலில் நீங்கள் தவிர்க்க முடியாது. அவர்களிடம் ரவிச்சந்திரன் அஸ்வின், சாஹல் ஆகியோருடன் ஆடம் ஜாம்பாவும் உள்ளார். இந்த 3 பேரையும் ஒன்றாக விளையாட வைக்க முடியாது என்பதே அவர்களுடைய பிரச்சினையாகும். அதனால் அவர்கள் 3-வது ஸ்பின்னரை தொடர்ந்து தேட வேண்டும். அதன் காரணமாகவே கடந்த முறை அவர்கள் முருகன் அஸ்வினை அதிகமாக விளையாட வைத்து ஜாம்பாவுக்கு குறைந்த வாய்ப்பு கொடுத்தனர் ” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.