மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் மடம் பழமையானது. இந்த மடத்தின் 27-வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருக்கிறார். இந்நிலையில் ஆதீனம் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ இருப்பதாகவும், அதை வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என தங்களை மிரட்டுவதாகக் கூறி, ஆதீனத்தின் சகோதரரர் விருத்தகிரி, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் ‘பா.ஜ.க-வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஆடுதுறை வினோத், மடாதிபதியின் நேர்முக உதவியாளர் செந்தில், திருவெண்காட்டைச் சேர்ந்த பா.ஜ.க முன்னாள் ஒன்றிய தலைவர் விக்னேஷ், செம்பனார் கோயிலைச் சேர்ந்த கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரம், அ.தி.மு.க பிரமுகரான மதுரை செய்யூர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், தி.மு.க.வின் செம்பனார் கோயில் மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த.விஜயகுமார், திருவிடைமருதூர் தாலுகா நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் மிரட்டினர்’ எனத் தெரிவித்திருந்தார்.
அதன் பேரில் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், வினோத், விக்னேஷ், குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகிய நான்கு பேரை கைதுசெய்து மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அகோரம், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், அமிர்த.விஜயகுமார், செந்தில் உள்ளிட்டோரை தேடி வருவதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில், “விஜயகுமார் எங்களுக்கு உதவி செய்வதற்கு இந்த விவகாரத்திற்குள் வந்தார். மிரட்டலுக்கும், அவருக்கும் தொடர்பில்லை. எனவே, எஃப்.ஐ.ஆரில் இருக்கும் அவர் பெயரை நீக்க வேண்டும்” என விருத்தகிரி தரப்பில் மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதன் பின்னணியில் ஆளுங்கட்சியின் அழுத்தம் இருப்பதாகப் பேசப்பட்டது. ஆனாலும் போலீஸ், எஃப்.ஐ.ஆரிலிருந்து விஜயகுமார் பெயரை நீக்கவில்லை.
இந்நிலையில் மயிலாடுதுறையில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவி வழங்குவதற்காக மயிலாடுதுறை வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்று, விஜயகுமார் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்திருந்தார். போலீஸாரால் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ள ஒருவர் முதல்வரை வரவேற்று விளம்பரம் கொடுப்பதை தி.மு.க தலைமை எப்படி அனுமதிக்கிறது என பலரும் விமர்சனம் செய்தனர். `விஜயகுமாருக்கும், இதற்கும் தொடர்பில்லை’ என ஆதீனம் தரப்பே சொல்லிவிட்டபோதும், அவர்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் இதனை விமர்ச்சிப்பதாக மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க தரப்பில் தெரிவிக்கின்றனர்.