அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியிருக்கிறது `ஜே.பேபி’.
இவர் இயக்குநர் வெங்கட் பிரபு, பா.இரஞ்சித் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், ‘லொள்ளு சபா’ மாறன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பா.இரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனமும் விஸ்டாஸ் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கின்றன.

இத்திரைப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு வருகிற மார்ச் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், “வெங்கட் பிரபு சார் என்னுடைய ‘அட்டகத்தி’ படத்துக்கு ஆதரவு தெரிவிச்சாரு. இப்போ சுரேஷ் மாரி அண்ணனோட படத்துக்கும் ஆதரவு கொடுக்க வந்திருக்கார். சினிமாவுல நான் முதன்முதல்ல ஒரு படத்துல வேலை பார்த்தேன். அதை வச்சு சினிமா இப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன். ஆனா, அதுக்கு பிறகுதான் ‘சென்னை 28’ படத்துல வேலை பார்த்தேன். ஜாலியாக இப்படியான வழிகளிலும் வேலை பார்க்க முடியும்னு எனக்குச் சொல்லி கொடுத்தது வெங்கட் பிரபு சார்தான். நான் சினிமாவுக்குள்ள வரும்போது எனக்குத் திருமணமாகவில்லை. ஆனா, இயக்குநர் சுரேஷ் மாரி சினிமாவுக்குள்ள நுழையும்போதே அவருக்குன்னு ஒரு குடும்பம் இருந்தது.

சினிமாவுக்குள்ள இருக்கும்போது குடும்பச் சூழல் பத்தி யோசனை இருக்கும். வேலையைச் சரியாக பார்க்காம இருந்தால் குடும்பத்தை ஒரு காரணம் சொல்லுவாங்க” என்றவர்,
“சுரேஷ் மாரி அண்ணனோட முதல் படமே போதைப் பொருள்களை மையமாக வச்சு நகரக்கூடிய கதைக்களம். இந்தப் படம் போதைப் பொருளைப் புனிதப்படுத்துற மாதிரி ஆகிடும்னு நீலம் பேனர்ல இதைப் பண்ணமுடியாதுனு சொன்னேன். அதுக்கு பிறகு இந்தப் படத்தோட கதையை எனக்குச் சொன்னார். எனக்கு இந்தக் கதை ரொம்ப பிடிச்சது. உறவுகளைப் பத்தி பேசுற படம், நிச்சயமாக நீலம் பேனர்ல பண்ணலாம்னு சொன்னேன். எனக்கு இந்தத் திரைப்படம் எப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே மாதிரி எல்லோருக்கும் தாக்கத்தை உண்டாக்கும்” என்றார்.
மேலும், “இப்படியான படங்கள்தான் நல்ல வரவேற்பைப் பெறும்னு நாம ஸ்டீரியோடைப் பண்ணவே முடியாது. இன்னைக்கு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை எல்லோரும் கொண்டாடுறாங்க. அந்தப் படத்தோட வெற்றிக்குக் காரணம் அதோட இயல்பான தன்மைதான். அது மாதிரியான படம்தான் இதுவும். எங்க அம்மா இந்தப் படத்தைப் பார்த்துட்டு, ‘நீ பண்ணின படங்களிலேயே நல்ல படம் இதுதான்’ன்னு சொன்னாங்க.

ஓ.டி.டி தளங்கள்ல இந்த மாதிரியான படத்தை வாங்குறதுக்கு யோசிக்குறாங்க. எங்களோட பார்வையாளர்களே வேறன்னு சொல்றாங்க. நானும் இங்க ‘அட்டகத்தி’ படம் பண்ணிதான் வந்திருக்கேன். அந்தப் படத்தைப் பலரும் பிடிக்கலைனு சொன்னாங்க. ‘இப்படியான படங்களைத்தான் மக்கள் விரும்புவாங்க’ங்கிற நிலைமை நிச்சயம் மாறும்” என முடித்துக் கொண்டார்.