புதுச்சேரி: புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சிறுமி மாயம்: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகளுக்கு 9 வயது. அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார்.
மாயமான சிறுமியை பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் நாராயணன் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தீவிரமாகத் தேடினர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததனர். அதில் ஒரு சிசிடிவி கேமிராவில் மட்டும் சிறுமி நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. போலீஸார் அந்த பகுதியில் வீடு, வீடாக தேடினர். அப்போதும் சிறுமி பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. சிறுமியை விரைந்து மீடக்கக் கோரி குடும்பத்தினரும், உறவினர்களும் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட சடலம்: தொகுதி எம்எல்ஏ பிரகாஷ்குமாரும், போலீஸ் டிஜிபியை சந்தித்து சிறுமியை விரைந்து கண்டறிய கோரினார். இந்நிலையில், இன்று சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி – கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து முத்தியால்பேட்டை போலீஸார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு வேட்டி துணியால் சுற்றி கால்வாயில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறுமியின் தந்தையும் கால்வாயில் மிதப்பது தனது மகள்தான் என்பதை உறுதி செய்தார்.
உறவினர்கள் போராட்டம்: கால்வாயில் இருந்து சிறுமியின் உடல் கிடைத்ததையடுத்து, அப்பகுதியில் பொதுமக்கள் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். சிறுமியின் உடலை எடுத்துச் சென்ற காவல் துறையினர், உடலை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நடந்தது.
இதையடுத்து போலீஸார் சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுமி கொலை செய்து கால்வாயில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் போலீஸார் 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கொலையாளிகள் மீது நடவடிக்கை கோரியும், மெத்தனமாக நடந்து கொண்ட போலீஸாரை கண்டித்தும் சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சோலை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, “இப்பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகம் உள்ளது. அதனை தடுக்க வேண்டும். சிறுமிக்கு நடந்தது போன்ற சம்பவம் இனிமேல் நடக்கக் கூடாது. கொலையாளிகளை விரைந்து கைது செய்து கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்படுபவர்கள் யாராக இருந்தாலும் உறுதியான நடவடிக்கை இருக்க வேண்டும்” என்றனர்.
சமாதான பேச்சுவார்த்தை தோல்வி: சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பலமுறை சமாதானம் பேசினர். ஆனால், அவர்கள் மறியலை கைவிட மறுத்ததால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மறியல் தொடர்ந்தது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த எம்எல்ஏக்கள் பிரகாஷ்குமார், நேரு ஆகியோர் பொதுமக்களிடம் பேசி சமாதானம் செய்தனர்.
நீண்ட நேரமாக போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இளைஞர் ஒருவர் போலீஸாரை ஆவேசமாக சாடி பேசினார். இதனால் கோபமடைந்த போலீஸார் அந்த இளைஞரை தாக்கி கைது செய்ய முயன்றனர். அதனை மறியலில் ஈடுபட்டவர்கள் தடுத்தனர்.
துணை ராணுவப்படை வருகை: இதனால் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் மறியலும் தொடர்ந்தது. இதையடுத்து புதுச்சேரிக்கு தேர்தல் பாதுகாப்புக்கு வந்த துணை ராணுவப்படையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களை கண்டு மேலும் பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். மறியலை கைவிட மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், போக்குவரத்து வேறு பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளது.
நாளை பிரேத பரிசோதனை: இதனிடையே, சிறுமியின் உடல் நாளை (மார்ச் 6) பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே சிறுமியின் இறப்பு குறித்த விவரங்களும், கொலைக்கான காரணங்களும் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.