Online Fraud: சிபிஐ அதிகாரிகள்போல் பேசி, முதியவரிடம் ரூ.4.8 கோடி சுருட்டிய கும்பல்!

மகாராஷ்டிரா மாநிலம், தானேவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஒருவர் குறிவைக்கப்பட்டு, அவரிடமிருந்து ரூ.4.8 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சைபர் க்ரைம் மோசடி

இது தொடர்பாக காவல்துறை தரப்பு, “சி.பி.ஐ அதிகாரிகள்போல் ஆள்மாறாட்டம் செய்தவர்கள், 67 வயதான முன்னாள் இயக்குநருக்கு செல்போனில் தொடர்புகொண்டு, தைவானுக்கு முகவரியிடப்பட்ட சட்டவிரோத பொருள்களடங்கிய ஒரு பார்சல் கிடைத்ததாகவும், அதில், பன்னாட்டு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான பாதிக்கப்பட்டவரின் பெயர் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

மேலும், பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது இருப்பதாகவும் தெரிவித்து, போலியான வழக்கு எண் ஒன்றையும் தெரிவித்திருக்கின்றனர். இதை பாதிக்கப்பட்டவர் முழுமையாக நம்பியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரிடம் வங்கி விவரங்களை பெறுவதற்காக, மத்திய அரசின் போலி லோகோக்களுடன் அதிகாரிகளாக நடித்து, வங்கிக் கணக்கு விவரங்கள், டெபிட் கார்டு எண்கள் மற்றும் சிவிவி குறியீடுகள் போன்ற முக்கியமான தகவல்களை தருமாறு அவரை வற்புறுத்தி பெற்றிருக்கிறார்கள்.

காவல்துறை விசாரணை

அந்த முதியவரும், தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் வகையில், அவர்கள் கேட்ட அனைத்து தகவல்களையும் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அவருடைய வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை இழந்திருக்கிறார். அதன் பிறகு, பாதிக்கப்பட்டவர் இங்கிலாந்தில் இருக்கும் தன்னுடைய மகனுடன் பேசியபோதுதான், அவர் ஏமாற்றப்பட்டதை அறிந்திருக்கிறார். அதன் பிறகே காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மோசடியாளர்களை கைதுசெய்ய அனைத்து வகையிலும் முயன்று வருகிறோம். இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறோம். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.