காசாவில் குழந்தைகளின் உயிரை பறிக்கத் தொடங்கிய பஞ்சம்

ரபா:

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக காசாவில் உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி படிப்படியாக முன்னேறிய இஸ்ரேல் படைகள் தற்போது கடைசி நகரமான ரபாவை சுற்றி வளைத்துள்ளனர்.

போர் தொடங்கியபோது உடனடி நடவடிக்கையாக காசாவுக்கான உணவு, தண்ணீர், மருந்து மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் செல்லும் பாதையை மூடியது. தெற்கு பகுதியில் உள்ள இரண்டு பாதைகள் வழியாக மட்டும் உதவிப் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளை அனுமதிக்கிறது. இதன் காரணமாக காசாவில் உணவுப் பற்றாக்குறை, பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலர் பசி பட்டினியால் வாடுகின்றனர்.

இந்நிலையில், உணவு பஞ்சம் காரணமாக போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் குழந்தைகள் இறக்கத் தொடங்கி உள்ளன.

“இஸ்ரேல் படைகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடக்கு காசாவில் உணவு விநியோகம் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் இங்கு பட்டினி மிகக் கடுமையாக உள்ளது. கமல் அத்வான் மற்றும் ஷிபா மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்” என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெற்கு காசாவில் உதவிப்பொருட்கள் வழக்கமாக கிடைத்தபோதிலும், எளிதில் உடல்நலம் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் உயிரிழக்கத் தொடங்கி உள்ளனர். ரபாவில் உள்ள எமிரதி மருத்துவமனையில் கடந்த ஐந்து வாரங்களில், குறைமாதத்தில் பிறந்த 16 குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நோயினால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘நாங்கள் பயந்ததுபோல் இங்கு குழந்தைகள் இறக்கத் தொடங்கி உள்ளன’ என யுனிசெப் அமைப்பின் மத்திய கிழக்கு தலைவர் அடேல் கோடர் சமீபத்தில் கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

காசாவில் பெருகிவரும் பசி, பட்டினிக்கு ஐ.நா. அமைப்புகள் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. ஆனால் இதனை மறுத்துள்ள ஐ.நா. அதிகாரிகள், சில பொருட்களை கொண்டு செல்லவிடாமல் இஸ்ரேல் கட்டுப்படுத்துவதாகவும், காசாவிற்குள் வாகனங்கள் செல்வதை தாமதப்படுத்தும் வகையில் சோதனைகளை கடுமையாக்குவதாகவும் கூறி உள்ளனர்.

சண்டை நடக்கும் பகுதியில் பாதுகாப்பான பாதையில் செல்ல இஸ்ரேல் படை அனுமதிக்காததால் வாகனங்கள் திரும்பி வரக்கூடிய சூழ்நிலையும் உள்ளது. மேலும் பசி பட்டினியால் வாடும் பாலஸ்தீனியர்கள், சில இடங்களில் லாரிகளை மறித்து உதவிப்பொருட்களை பறிக்கின்றனர். இதனால் காசாவிற்குள் பொருட்கள் விநியோகம் முடங்கியுள்ளது என்று ஐ.நா. அதிகாரிகள் கூறுகின்றனர்.

பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையடுத்து, வடக்கு காசாவிற்கு நேரடியாக உதவிப்பொருட்கள் கிடைக்கும் வகையில் பாதைகளை திறந்து, கப்பல் போக்குவரத்தை அனுமதிப்பதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.