
போதை கடத்தல் பணத்தில் தயாரிக்கப்பட்ட 'மங்கை'
திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக பிரமுகருமான ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது உறுதியான நிலையில் அவர் தலைமறைவானார். தற்போது அவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
“இறைவன் மிகப் பெரியவன், இந்திரா, மங்கை' ஆகிய படங்களின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக். 'கயல்' ஆனந்தி கதாநாயகியாக நடித்த 'மங்கை' படத்தை மார்ச் 1ம் தேதி வெளியிடுவதாக இருந்தார்கள். ஆனால், தயாரிப்பாளரின் போதைப் பொருள் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததால் அந்தப் படம் கடந்த வாரம் வெளியாகவில்லை. அதன்பின் அப்படம் குறித்த எந்த அப்டேட்டும் வரவில்லை.
இந்நிலையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் விசாரணையில் 'மங்கை' படத்தை போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் தயாரித்ததாக ஜாபர் சாதிக் சொன்னதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் தொடர்புடைய மேலும் சில தமிழ் சினிமா பிரபலங்களும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள். இந்த விவகாரத்தில் யார் யார் சிக்கப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிய வரும்.