புதுடில்லி:தலைநகர் டில்லியில் 2024- – 2025ம் நிதியாண்டிலும் மின்சார மானியத் திட்டத்தைத் தொடர அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கான கோப்பு, துணைநிலை கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
டில்லி அரசு மாதத்துக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குகிறது. மேலும், 201 – -400 யூனிட் வரை உபயோகிக்கும் மின்சாரத்துக்கான கட்டணத்தில் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை 2024 – 2025ம் நிதியாண்டுக்கும் நீட்டிக்க டில்லி அமைச்சரவை கடந்த 7ம் தேதி ஒப்புதல் அளித்தது.
இதற்கான கோப்பு டில்லி துணை நிலை கவர்னர் சக்சேனா ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சட்டசபையில் நடக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பேசியதாவது:
மத்திய பா.ஜ., அரசு என்னை சிறையில் அடைக்க திட்டமிடுகிறது. மேலும், டில்லி அரசின் இலவச மின்சாரம், மொஹல்லா கிளினிக் மற்றும் புதிய அரசு மருத்துவமனை ஆகிய திட்டங்களை முடக்கவும் சதி செய்து வருகிறது.
டில்லியில், 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் 22 லட்சம் குடும்பங்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை.
அவர்களுக்கு இந்தச் சலுகை தொடர வேண்டும் என டில்லி அரசு விரும்புகிறது.
அதற்கான கோப்பு துணை நிலை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்தால் இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement