கமல், ஷங்கர் கூட்டணியின் `இந்தியன் 2′ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. படத்தை விரைவில் திரைக்குக் கொண்டு வர முயற்சிகள் எடுத்து வருகின்றனர். ஏப்ரலில் வெளியாகலாம், மே மாதம் வெளியாகலாம் எனத் தகவல்கள் பரவுகின்றன. இந்நிலையில் `இந்தியன் 2’வின் நிலவரம் குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இவை.

ஷங்கரின் ‘இந்தியன்’ வெளியாகி 28வது வருடத்தைக் கொண்டாடி வருகிறது. லஞ்சம், ஊழலுக்கு எதிராக நேர்மையைப் பேசும் கதை இது. இதில் இந்தியன் தாத்தா வீரசேகரன் சேனாபதியாக கமல் நடிப்பில் மிரட்டியிருப்பார். 1996-ல் வெளியான படம் இப்போதும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் அவலுடன் எதிர்பார்த்த சூழலில்தான் ‘இந்தியன் 2’ உருவானது.
இதில் கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், மறைந்த விவேக், நெடுமுடிவேணு உட்படப் பலர் நடித்திருக்கிறார்கள். ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சமயத்தில்தான் ஷங்கர், ராம்சரண் கூட்டணியின் ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பும் ஒரு சேரப் போய்க்கொண்டிருந்தது. ‘இந்தியன் 2’ இந்திய அளவில் பேசப்பட்ட ஊழல்கள், ஆதார் மோசடிகள், அரசியல் சூதுகள் என நடப்பு பிரச்னைகளைப் பேசும் ஒன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அனிருத்தின் இசை, ரவிவர்மனின் ஒளிப்பதிவும் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. ‘இந்தியன் 2’வின் படப்பிடிப்பு மொத்தமுமே நிறைவடைந்து விட்டது என்றும், அதன் அடுத்த பாகமான ‘இந்தியன் 3’யின் வேலைகளில்தான் ஷங்கர் இப்போது இருக்கிறார் என்கிறார்கள். சித்தார்த், பிரியா பவானி சங்கர் காம்பினேஷனில் ‘இந்தியன் 3’க்கான புரொமோஷன் பாடல் ஷூட்டும் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் அனிருத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகளும், எடிட் ஷூட்டில் படத்தொகுப்பு வேலைகளும் மும்முரமாகப் போய்க் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே படத்தை மே மாதம் திரைக்குக் கொண்டு வருவது உறுதிதான் என்கிறார்கள். முதல் பாகமான `இந்தியன்’ திரைப்படம் கடந்த 1996ம் ஆண்டு மே மாதம் 9ம் தேதி வெளியானது. எனவே `இந்தியன் 2’வையும் அதே தினத்தில் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகின்றனர்.