Icc T20 Worldcup: 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை ஆனது மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஜூன் 1ஆம் தேதி துவங்க உள்ளது. இறுதிப் போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மாதம் நடைபெறும் இந்த உலக கோப்பையில் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், அயர்லாந்து மற்றும் கனடா ஆகிய அணிகள் குழு A இணைந்துள்ளது. கடைசியாக இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை வென்றது. அதன் பிறகு ஒரு உலக கோப்பையை கூட இந்திய அணியால் வெல்ல முடியவில்லை.
2024 உலக கோப்பையில் இந்திய அணி தனது போட்டியை ஜூன் 5 அன்று அயர்லாந்திற்கு எதிராக நியூயார்க்கில் உள்ள Nassau County International Cricket Stadiumல் விளையாடுகிறது. மேலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தானுக்கு எதிரா போட்டி ஜூன் 9 அன்று அதே மைதானத்தில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் இரண்டு மாதங்களுக்கும் மேல் உள்ள நிலையில், இந்திய அணியில் யார் யார் இடம் பெற போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. காரணம் சமீபத்தில் பல இளம் வீரர்கள் நன்றாக விளையாடி வருகின்றனர். மேலும் இதன் காரணமாக சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்க பிசிசிஐ முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டி20 மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பைகளில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் விராட் கோலி, இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இவரை தவிர ரிஷப் பந்த், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார். அவருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க உள்ளார். கில் ஒரு பேக்அப் ஓப்பனராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் நம்பர் 1 டி20 பேட்டர் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. சூர்யா 3வது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது. ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் இருப்பார்கள். மேலும் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இந்தியாவின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.