சென்னை: சிபிசிஐடி ஐ.ஜி. உள்பட தமிழகம் முழுவதும் 13 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் பி.அமுதா நேற்று பிறப்பித்த உத்தரவு: சிறப்பு புலனாய்வு பிரிவு சிபிசிஐடி ஐ.ஜி பி.சி.தேன்மொழி தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஐஜியாகவும், திருச்சி வடக்கு துணைஆணையர் வி.அன்பு சென்னை ரயில்வே எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் தெற்கு துணைஆணையர் எஸ்.வனிதா எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராகவும், அங்குபணியில் இருந்த டி.ரமேஷ் பாபு சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராகவும், அங்கிருந்தஎஸ்.எஸ்.மகேஸ்வரன் சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ரோகித் நாதன் ராஜகோபால் கோவை போக்குவரத்து காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். மதுரை தெற்கு துணை ஆணையர் பி.பாலாஜி காவலர் நலன் உதவி ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், நாகப்பட்டினத்தில் கடலோர பாதுகாப்பு குழும எஸ்.பி.யாக இருந்த கே.அதிவீரபாண்டியனுக்கு சென்னை நிர்வாகப்பிரிவு துணை ஆணையராக பணி வழங்கப்பட்டுள்ளது.
5 பேருக்கு பதவி உயர்வு: அரக்கோணம் உட்கோட்டம் உதவி எஸ்பி.யாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக், திருப்பூர் தெற்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும், உத்தமபாளையம் உட்கோட்ட உதவி எஸ்பி மது குமாரி மதுரை வடக்கு சட்டம் – ஒழுங்கு துணை ஆணையராகவும், காரைக்குடி உட்கோட்ட உதவி எஸ்பிஆர்.ஸ்டாலின் கோவை வடக்கு துணைஆணையராகவும், திருவள்ளூர் உட்கோட்டம் உதவி எஸ்பி விவேகானந்த சுக்லா திருச்சி வடக்கு துணை ஆணையராகவும், அருப்புகோட்டை உட்கோட்ட உதவி எஸ்பி கரத் கருண் உத்தவ்ராவ் மதுரை தெற்கு துணை ஆணையராகவும் பதவி உயர்வு பெற்று பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.