கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது சகோதரர் பாபன் பானர்ஜியுடனான உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “எனது குடும்பமும் நானும் பாபன் பானர்ஜி உடனான உறவை முறித்துக் கொள்கிறோம். அவருடைய பல செயல்பாடுகளை நான் ஏற்கவில்லை. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் அவர் எதாவது பிரச்சினையை உருவாக்குகிறார். பேராசை பிடித்தவர்களை எனக்குப் பிடிக்காது. வாரிசு அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே, பாபன் பானர்ஜியுடனான அனைத்து உறவையும் துண்டிக்க முடிவு செய்துள்ளேன்” என்று அறிவித்தார் மம்தா பானர்ஜி. பாபன் பானர்ஜி பாஜகவுக்கு செல்வது பற்றி பேசிய மம்தா, “அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்” என்று தெரிவித்தார்.
உறவு முறிவுக்கு காரணம்: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆஸ்தான தொகுதிகளில் ஒன்று ஹவுரா மக்களவை தொகுதி. ஹவுரா தொகுதியில் அக்கட்சி சார்பில் மூன்று முறை வெற்றி பெற்றவர் பிரசுன் பானர்ஜி. இவரையே மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளார் மம்தா.
ஆனால், இதனை கடுமையாக எதிர்த்துள்ள மம்தாவின் சகோதரர் பாபன் பானர்ஜி, “ஹவுரா வேட்பாளர் தேர்வில் எனக்கு மகிழ்ச்சியில்லை. பிரசுன் சரியான தேர்வு அல்ல. ஹவுராவில் பல திறமையான வேட்பாளர்கள் இருந்தும் அவர்கள் கவனிக்கப்படவில்லை. எனக்குத் தெரியும் இந்த விஷயத்தில் மம்தா என்னுடன் உடன்படமாட்டார். ஆனால், தேவைப்பட்டால், நான் ஹவுரா மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவேன்” என்று தெரிவித்தார்.
ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியோ பிரசுன் பானர்ஜி வேட்பாளர் என்று கூறி அவருக்கு ஆதரவாக நின்றது. இது தொடர்பாக மம்தாவுக்கும் பாபன் பானர்ஜிக்கும் மோதல் எழவே, உறவை துண்டித்துக் கொள்ளும் அளவுக்கு சென்றுள்ளது விஷயம்.
மம்தா உறவை துண்டித்து கொள்வதாக அறிவித்த சில மணி நேரங்களில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருக்கிறார் அவரது சகோதரர் பாபன் பானர்ஜி. அதில், “நான் ஒரு தவறு செய்துவிட்டேன். மம்தா என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இது தனிப்பட்ட விஷயம். இதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. கட்சி வேட்பாளரை எதிர்த்து நான் எதுவும் சொல்ல முடியாது. மம்தாவின் ஆசீர்வாதமே எனக்கு எல்லாம்” என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.