Vijay: ”விஜய் சாரால தான் என் மகன் மீண்டு வந்துருக்கான்!” – நெகிழும் கமீலா நாசர் பேட்டி

‘தோழர்களாய் ஒன்றிணைவோம்’ எனக்கூறி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

இந்தச் சூழலில், நடிகர் நாசர் – கமீலா நாசர் தம்பதியரின் மகன் ஃபைசல் உடல்நலம் சரியில்லாத சூழலிலும்கூட த.வெ.கவில் உறுப்பினராக இணைந்திருப்பதுதான் விஜய்யையே நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. இதுகுறித்து, கமீலா நாசரிடம் பேசியபோது…

”என்னுடைய பையன் சின்ன வயசுல இருந்தே விஜய் சாரோட வெறித்தனமான ஃபேன். சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு எங்களையே நினைவுக்கு இல்லாத என் மகனுக்கு, விஜய் சார் மட்டும்தான் நினைவில் இருந்தார். அவன், குணமாகணும் என்பதற்காக விஜய் சார் எங்க வீட்டுக்கே வந்து பார்த்துட்டு ஆறுதல் சொல்லிட்டு போனார்.

நாசர் மகன் ஃபைசல்

இன்னைக்கு அவன் மீண்டு வந்துக்கிட்டிருக்கான்னா விஜய் சார் ஒரு முக்கியக் காரணம். இப்போ, விஜய் சார் கட்சி ஆரம்பிச்சிருக்காரு. கட்சியில இணையச் சொல்லி அழைப்பு விடுத்திருந்ததை என் மகன் பார்த்து இம்ப்ரஸ் ஆகிட்டான். உடனே, கட்சியில சேர்ந்தே ஆகணும்னு உற்சாகத்தோடு சொல்ல ஆரம்பிச்சுட்டான்.

அவனோட விருப்பத்துல நாங்க தலையிட விரும்பல. அவனோட விருப்பம்தான் எங்கள் விருப்பம். விஜய் சார் அரசியலுக்கு வந்தது வரவேற்கப்படணும். இப்போ, இருக்கிற சூழலில் ஒரு மாற்றம் தேவை. சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சு அறிக்கை விட்டிருக்கார். அதை, நாம எல்லாம் பாராட்டணும். விஜய் சார் ரெண்டு வரியில அறிக்கை விட்டிருக்கார்ன்னு கிண்டல் பன்றாங்க. அவர், இன்னும் அரசியலில் முழுசா இறங்கல. ஆனா, அவரோட கையெழுத்தைத் தாங்கி இந்த அறிக்கை வந்ததை பெரிய விஷயமா பார்க்குறேன்.

நடிகர் நாசரின் குடும்பம்

மூணு பக்கம், நாலு பக்கம் அறிக்கை விடணும்னு அவசியமில்ல. சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகள் ரெண்டு வரியில கருத்து சொல்றாங்களே, அதுக்கு என்ன சொல்றீங்க? அவர், தேர்தல் அரசியலுக்கு இன்னும் வரல. அதனால, அரசுக்குத்தான் கோரிக்கை வைக்கமுடியும். அதனாலதான், அப்படி கோரிக்கை வெச்சிருக்காரு. கட்சி ஆரம்பிச்சிருக்கிறதுக்கு விஜய் சாரை நேர்ல பார்த்து வாழ்த்து சொல்லணும். விஜய் சாரை நிறைய இளைஞர்கள் ஃபாலோ பண்றாங்க. அப்படிப்பட்ட அவரோட கட்சியில என் மகன் சேர்ந்ததுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்தான்.” என்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.