இந்திய அணிக்காக நான் அறிமுகமான பின்னர் என்னுடைய வளர்ச்சி என்ன தெரியுமா…? – சர்பராஸ் கான்

மும்பை,

26 வயதான இந்திய கிரிக்கெட் அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சர்பராஸ் கான் அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் அறிமுகமாகினார்.

அந்த தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி கொண்ட சர்பராஸ் கான் அபாரமாக ஆடி ரன்களை குவித்தார். இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடினார்.

அந்த வகையில் 3 போட்டிகளில் 5 இன்னிங்சில் பேட்டிங் செய்த சர்பராஸ் கான் 50 ரன்கள் சராசரியுடன் 3 அரை சதங்களுடன் 200 ரன்களை குவித்தார். இதன் காரணமாக அவருக்கு தொடர்ச்சியாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியாவில் ஐ.பி.எல் தொடரானது நடைபெறவுள்ள வேளையில் எந்த அணியிலும் இடம் பெறாத சர்பராஸ் கான் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இந்திய அணிக்காக அறிமுகமான பின்னர் தற்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகிய பின்னர் தன்னுடைய வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பதை குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஐ.பி.எல் போன்ற நீண்ட தொடர்களில் விளையாடும் வீரர்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எனக்கான அழைப்பு எந்த அணியில் இருந்தும் எந்த நேரத்திலும் வரலாம். அதற்காக நான் தயாராக இருக்க வேண்டியது அவசியம். அதனால் என்னுடைய பேட்டிங்கில் கவனத்தை செலுத்த இருக்கிறேன்.

வீட்டில் இருந்தவாறு எப்போதும் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறேன். சிறுவயதிலிருந்தே என் தந்தை டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை சொல்லியே வளர்த்துள்ளார். அதனாலே நான் கிரிக்கெட் மீது பெரியளவில் பற்று கொண்டவனாக இருந்து வருகிறேன். இந்திய அணிக்காக அறிமுகமாகிய போது நிறைய பிரஷர் இருந்தது. ஆனாலும் வேகமாக நான் ரன்களை சேர்த்ததால் அதிலிருந்து வெளிவர முடிந்தது.

இந்திய அணிக்காக அறிமுகமான பின்னர் என்ன மாற்றம் நடந்தது? என்று பலரும் கேட்கிறார்கள். அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 60,000 முதல் 70,000 வரை இருந்தது. ஆனால் இந்திய அணிக்காக மூன்றே போட்டிகளில் ஆடிய பின் அது 1.6 மில்லியனாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.