கோல்கட்டா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின், 69, உடல்நிலை சீராக உள்ளதாகவும், தற்போது வீட்டில் இருந்தபடியே டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மூளையில் ஏற்பட்ட அதிர்வு காரணமாகவோ அல்லது யாரோ பிடித்து தள்ளி விட்டதன் காரணமாகவோ, அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
பரிசோதனை
இங்கு, கோல்கட்டாவின் காளிகாட் பகுதியில் உள்ள தன் வீட்டில் நேற்று முன்தினம் மம்தா பானர்ஜி தடுமாறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், அவருக்கு படுகாயம் ஏற்பட்டு மயங்கி உள்ளார்.
உடனே, அவரை அருகே உள்ள எஸ்.எஸ்.கே.எம்., மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர். அங்கு முதல்வர் மம்தாவுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின், இன்ஸ்டியூட் ஆப் நியூரோ சயின்ஸ்க்கு மாற்றப்பட்டு அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகின.
இதற்கிடையே, மயங்கிய நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜியின் நெற்றியில் ரத்தம் வடியும் புகைப்படத்தை திரிண முல் கட்சி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது. இதனால் தொண்டர்கள், மற்ற அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் இரவே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது வீட்டில் இருந்தபடியே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் மணிபாய் கூறுகையில், “மூளைப் பகுதியில் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக மயங்கிக் கீழே விழுந்த முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, காயங்கள் ஏற்பட்டன. இதனால், நெற்றியில் மூன்று தையல்களும், மூக்கில் ஒரு தையலும் போடப்பட்டுள்ளன. முன்னதாக, அவருக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன,” என்றார்.
கூடுதல் பாதுகாப்பு
இதற்கிடையே, முதல்வர் மம்தா பானர்ஜியை, யாரோ பிடித்து கீழே தள்ளி விட்டிருக்கக்கூடும் என மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக, இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில், இச்சம்பவத்திற்குப் பின் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்