புதுடில்லி:டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் சம்மனுக்கு ஆஜராகாத தன் மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது விசாரணைக்கு தடை விதிக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கையை டில்லி குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும், இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய கெஜ்ரிவால், டில்லி பெருநகர மாஜிஸ்திரேட்டை அணுகுமாறு கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராகேஷ் சைல் உத்தரவிட்டுள்ளார்.
டில்லி அரசின் 2021 -2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரிக்க டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார்.
விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, அப்போதைய டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கடந்த அண்டு பிப்ரவரியில் கைது செய்தது.
மேலும், இந்த விவகாரத்தில் நடந்த பணமோசடி குறித்து வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறையும் சிசோடியா உள்ளிட்ட்டோரை கைது செய்தது.
இந்த விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை இதுவரை எட்டு முறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஆனால், அவற்றை கெஜ்ரிவால் நிராகரித்தார். தேவைப்பட்டால், ‘வீடியோ கான்பரன்சிங்’ வாயிலாக பதில் அளிக்க தயாராக இருப்பதாக அமலாக்கத் துறைக்கு பதில் அனுப்பினார்.
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர அனுமதிக்குமாறு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்தது.
அமலாக்கத் துறையின் மனுவுக்கு மார்ச் 16ல் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, கெஜ்ரிவால் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை நேற்று விசாரித்த, கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராகேஷ் சைல், கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்தார்.
மேலும், டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டார்.
இந்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரப்பாக பேசப்படுகிறது.
ஏனெனில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, அமலாக்கத் துறையால் நேற்று கைது செய்யப்பட்டார்.
சிசோடியாவுக்கு ஜாமின் ‘நஹி’
மதுபானக் கொள்கை முறைகேடு மற்றும் பணமோசடி வழக்குகளில் கடந்த ஆண்டு பிப்.,26ல் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவரது ஜாமின் மனுக்கள், விசாரணை நீதிமன்றம், டில்லி உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டன.இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, மார்ச் 13ல் தள்ளுபடி செய்தது. தன்னுடைய ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, மணீஷ் சிசோடியா, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சிசோடியா தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை பரிசீலனை செய்து நிராகரித்தது. மேலும், நீதிமன்றத்தில் அவருடைய சீராய்வு மனுவை விசாரிக்க பட்டியலிடுவதற்கான விண்ணப்பத்தையும் தள்ளுபடி செய்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்