மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) 100 சதவீதம் பாதுகாப்பானவை என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: தேர்தலில் தாங்கள் விரும்பியபடி வெற்றியடையவில்லை என்ற ஆதங்கத்தால்தான் பலர் இவிஎம் மேல் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். உண்மையில் அவை 100 சதவீதம் பாதுகாப்பானவை. அதிலிருக்கும் தரவுகளை யாரும் மாற்ற இயலாது.
இவிஎம்கள் மற்றும் விவிபேட்கள் தவறானது எனக் கூறுபவர்களின் எண்ணம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இவற்றை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் 40 முறை நிராகரித்துள்ளன.
இவிஎம் வாக்காளர்களின் ரகசியத்தை பேணுவதற்கு அவற்றை ஒருங்கிணைப்பதற்கான தொழில்நுட்பம் தேவை என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த தொழில்நுட்பம் தற்போது தயாராக உள்ளது.
72 சட்டப்ரேவை தொகுதிகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் ஒரு இவிஎம் மூலம் வாக்களிப்பதற்கான தொழில்நுட்ம் உருவாக்கப்பட்டுவிட்டது. அதேபோன்று மின்னணு முறையில் ரிமோட் வாக்களிப்பை தொடங்கவும் தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.
ஆனால் அந்த புதிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கு நேரம் எடுக்கும். அதற்கான தேவை தற்போது எழவில்லை. இவிஎம் குறித்து சந்தேகம் எழுப்புவது ஆதாரமற்றது என்பதை நீதிமன்றங்கள் பல்வேறு தருணங்களில் உணர்த்தியுள்ளன