கோவை: கோவையில், சாய்பாபா கோயிலில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை இன்று (மார்ச் 18) பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பிரம்மாண்ட வாகனப் பேரணி நடந்தது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்குச் சென்று சூறாவாளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில், கோவையில் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடத்த பாஜகவினரால் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோயில் சந்திப்பில் இருந்து தொடங்கி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் அருகே நிறைவடையும் வகையில் 2.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனப் பேரணி திட்டமிடப்பட்டது.
இந்த வாகனப் பேரணியில் கலந்து கொள்வதற்காக, மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 18) முதல் முறையாக தமிழகத்துக்கு வந்தார். கர்நாடக மாநிலத்தின் ஷிவமோக்காவில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை கோவை விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.
அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, காா் மூலமாக அவிநாசி சாலை, சிவானந்தா காலனி வழியாக மேட்டுப்பாளையம் சாலையில் வாகனப் பேரணி தொடங்கும் இடத்துக்கு மாலை வந்தடைந்தார். அங்கும் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, முன்னரே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட திறந்தநிலை காரின் பின்பகுதியில் பிரதமர் மோடி ஏறினார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ஆகியோரும் ஏறினர். சரியாக மாலை 6 மணிக்கு பிரதமரின் வாகனப் பேரணி சாய்பாபா கோயில் சந்திப்பிலிருந்து தொடங்கியது.
வாகனம் வேகமாக செல்லாமல், மிக மெதுவாக சென்றது. பேரணி தொடங்கிய இடத்திலிருந்து முடியும் இடம் வரை சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
அவர்கள் தங்களது கைகளில் இருந்த மலர்களை, பிரதமரின் வாகனத்தின் மீது தூவி, ‘மோடிஜி.. மோடிஜி..’ என உற்சாகமாக அழைத்து பிரதமரை வரவேற்றனர். திரண்டிருந்த மக்களைப் பார்த்து உற்சாகமடைந்த பிரதமர் மோடி தன் இரு கைகளை தூக்கி மக்களிடம் காட்டி அசைத்தவாறும், வணக்கம் வைத்தவாறும் சென்றார். செல்லும் வழியில், நாதஸ்வரம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடைகளின் மீது இருந்தவாறு கலைஞர்கள் தங்களது கலை நிகழ்ச்சிகைள நடத்தினர். அவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டவாறு சென்றார்.

மலர்தூவி அஞ்சலி: வாகனப் பேரணி மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து சிந்தாமணி ரவுண்டானா வழியாக, காமராஜபுரம் சிக்னலை கடந்து ஆர்.எஸ்.புரத்துக்குள் நுழைந்தது. இறுதியாக டி.வி.சாமி சாலை – டி.பி.சாலை சந்திப்பில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் அருகே இன்று மாலை 7.15 மணிக்கு வந்து நிறைவடைந்தது.
பேரணி நிறைவடைந்த பகுதியில் வாகனத்திலிருந்து இறங்கிய பிரதமர், அஞ்சல் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் நினைவாக வைக்கப்பட்டிருந்த பதாகையில் உள்ள புகைப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர், அங்கிருந்த பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அங்கு வந்து பதாகை தொடர்பாகவும் பிரதமரிடம் விளக்கிக் கூறினார். தொடர்ந்து 7.15 மணிக்கு பிரதமர் ஆர்.எஸ்.புரத்திலிருந்து கார் மூலமாக புறப்பட்டு, ரெட்பீல்டு அருகேயுள்ள சர்க்கியூட் ஹவுஸ் எனப்படும் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். அங்கு இன்று இரவு அவர் தங்குகிறார்.
முன்னதாக, பேரணி நிறைவடைந்த பகுதியில், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணி தொடங்கிய இடத்திலிருந்து முடியும் இடம் வரை இருபுறங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்து பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.