அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு பேசியுள்ளார்.
அப்போது மாணவர்களிடையே உரையாடிய சூர்யா, “ஐந்து ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும். அந்தளவுக்கு அவர்களிடம் சக்தி உள்ளது” என்று பெண்கள் குறித்து பேசியிருக்கிறார். தொடர்ந்துபேசிய அவர், “நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் கால் வைத்திருந்தாலும் அவரை அங்கு கொண்டு சேர்த்தது ஒரு பெண்தான். பிரிட்ஜ், சிசிடிவி, கீமோ தெரபி, கம்ப்யூட்டர் சாப்ட்வேர், வீடியோ கால் எனப் பலவற்றையும் கண்டுபிடித்தது பெண்தான்.

அக்னி மிஸைல் தொடங்கி, இஸ்ரோ வரை பெண்களின் பங்களிப்பு என்பது அதிக அளவில் இருக்கிறது. என்னைச் சுற்றி இருக்கக்கூடிய பெண்களை மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகத்தான் பார்த்திருக்கிறேன். பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்று முழுமையாக நம்புகிறேன். பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களைவிட 50% அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது.

ஆனால், ஐந்து ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும். அந்தளவுக்கு அவர்களிடம் சக்தி உள்ளது. அவர்களை இன்னும் மேலே கொண்டு வர நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம்” என்று பெண்களைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.