'போதைக்காக பாம்பு விஷம்..' விருந்து ஏற்பாடு செய்த பிரபல யூடியூபர் சிறையில் அடைப்பு

போதை விருந்து நிகழ்ச்சி ஒன்றில், போதை ஏற்றுவதற்காக பாம்பு விஷத்தை சப்ளை செய்ததாக பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் (வயது 26) உள்ளிட்ட சிலர் மீது கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் உள்ள பண்ணை வீட்டில் இந்த போதை விருந்து நடைபெற்றதாகவும், வெளிநாட்டு பெண்களை அங்கு வரவழைத்து, அவர்களுடன் பாம்பு விஷம் மற்றும் பிற போதைப் பொருட்களை உட்கொண்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது. எல்விஷ் யாதவ் தனது நண்பர்களுடன் இணைந்து பாம்பு விஷம் மற்றும் உயிருள்ள பாம்புகளைப் பயன்படுத்தி விருந்து நிகழ்ச்சிகளை நடத்தி, அவற்றை வீடியோ காட்சிகளாகப் பதிவு செய்ததாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது.

அதன்பேரில் போலீசார் நடத்திய சோதனையில், விருந்து நடந்த இடத்தில் 9 பாம்புகள் மீட்கப்பட்டன. 4 பாம்பாட்டிகள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பாம்பு விஷமும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேசமயம் யூடியூபர் எல்விஷ் யாதவ் தன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்துவந்தார். தொடர் விசாரணைக்கு பிறகு எல்விஷ் யாதவ் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், தான் ஏற்பாடு செய்த போதை விருந்துகளில் பாம்புகள் மற்றும் பாம்பு விஷத்தை ஏற்பாடு செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு பாம்பு விஷம் சப்ளை செய்து கைது செய்யப்பட்ட நபர்களை தனக்கு தெரியும் என்றும், அவர்களை பல்வேறு போதை விருந்து நிகழ்ச்சிகளில் சந்தித்ததாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் எல்விஷ் யாதவ் கூறியதாக தெரிகிறது.

விசாரணைக்குப் பிறகு எல்விஷ் யாதவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.