பிரபல பஞ்சாப் பாடகர் சுப்தீப் சிங் என்கிற சித்து மூஸ்வாலாவின் தாயார் சரண் கவுருக்கு (58) ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சித்து மூஸ்வாலா 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி பட்டப்பகலில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். பஞ்சாப்பில் காங்கிரஸ் தலைமையிலான அரசின்போது, வி.ஐ.பி. அந்தஸ்த்தில் இவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் மான்சா தொகுதியில் போட்டியிட்ட சித்து, அதில் தோல்வியுற்றார். அதன்பின் அமைந்த ஆத்மி ஆட்சியில் 424 பேரின் வி.ஐ.பி. பாதுகாப்பு நீக்கப்பட்டது. அவர்களில் ஒருவராக இருந்தார் சித்து மூஸ்வாலா. வி.ஐ.பி-க்களுக்குக் கொடுத்து வந்த பாதுகாப்பை அரசு விலக்கிக்கொண்ட அடுத்த சில நாள்களில், இப்படுகொலை நடந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
So happy to see Sidhu Moosewala’s parents happy again! God bless the little one. pic.twitter.com/0G7TglVWJq
— Gagandeep Singh (@Gagan4344) March 17, 2024
சித்து மூஸ்வாலா, அவரின் பெற்றோருக்கு ஒரே மகனாவார். அவரின் மரணம் அவரது பெற்றோரை மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரின் தந்தை பால்கவுர் சிங் (60), பஞ்சாப் அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். ஒரே மகனை இழந்த சித்து மூஸ்வாலாவின் பெற்றோர், தன் வாழ்க்கையையே இழந்துவிட்டதாக, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப்போயிருந்தனர்.
இந்தச் சூழலில்தான் அவர்கள் மீண்டும் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிவுசெய்தனர். ஆனால், சித்து மூஸ்வாலாவின் தாயார் சரண் கவுருக்கு வயது 58 ஆகிவிட்டது. இதனால் செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிவுசெய்தனர். இதற்காக அவர்கள் சிகிச்சையும் எடுத்துக்கொண்டனர். வயதானவர்களுக்குச் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை 20 சதவிகிதம் மட்டுமே பலன் கொடுக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சித்து மூஸ்வாலாவின் பெற்றோருக்கு நேற்று (17.03.2024) ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. இந்தச் செய்தியை தனது ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துள்ள அவரது தந்தை பால்கவுர் சிங் (60), “சுபதீப்பை நேசிக்கும் லட்சக்கணக்கான ஆத்மாக்களின் ஆசிகளால், சுபதீப்பின் இளைய சகோதரரை கடவுள் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். வாஹேகுருவின் ஆசிகளால், எங்களுடைய குடும்பம் ஆரோக்கியத்துடன் உள்ளது. எங்கள் மீது அன்பு கொண்டுள்ள நலம் விரும்பிகளுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம். எங்களுக்குப் பிறந்திருக்கும் இக்குழந்தை சுப்தீப் சிங்கின் சகோதரர் மட்டுமல்ல, இறந்த என் மகன் சுப்தீப்தான் எங்களுக்கு மறுபடியும் பிறந்துள்ளார். இப்போது எங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்திருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.