IPL Updates In Tamil: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 17வது சீசன் மார்ச் 22 முதல் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிக்கு பெரும் அடி விழுந்துள்ளது. அதிரடி மற்றும் முன்னணி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ், தேசிய கிரிக்கெட் அகாடமி (என்சிஏ) தரப்பில் இருந்து முழு உடற்தகுதி உடன் தான் இருக்கிறார் என்ற சான்றிதழ் வழங்கப்படவில்லை. அப்படிப்பட்ட நிலையில், மார்ச் 24-ம் தேதி நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் அணி பங்கேற்கும் முதல் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாது. அதுமட்டுமில்லாமல் தேசிய கிரிக்கெட் அகாடமி, “அவரைத் தகுதியானவர்” என்று அறிவிப்பதில் தாமதம் செய்தால், அவர் மேலும் சில ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாமல் போகலாம். இந்த விசியத்தை அறிந்த மும்பை அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
காயத்தால் அவதிப்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ் தற்போது சில ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவது உறுதியாகியுள்ளது. ஆனால் அவர் முழு ஐபிஎல் சீசனில் இருந்தும் வெளியேறுவாரா? இல்லையா? என்பது குறித்து அடுத்த உடற்தகுதி சோதனையின் போது தெரிந்துவிடும்.
“இதயம் நொறுங்கியது” எமோஜியை பகிர்ந்த சூர்யகுமார் யாதவ்
Cricbuzz இன் அறிக்கையின்படி, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வரும் சூரியகுமார் யாரவுக்கு இன்று (செவ்வாய்கிழமை) உடற்தகுதி சோதனை செய்யப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 100 சதவீதம் உடற்தகுதி பெறவில்லை என்றும், தற்போதைய நிலையில் அவரால் விளையாட முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் ஐபிஎல் 2024 தொடரின் தொடக்க ஆட்டத்தில் அவர் பங்கேற்கும் வாய்ப்பு பறிபோனது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, தனது சமூக ஊடக தளத்தில் இதயத்தை உடைக்கும் எமோஜியைப் பகிர்ந்து சூர்யகுமார் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். தற்போது சூர்யகுமாரின் அடுத்த உடற்தகுதி தேர்வு மார்ச் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.
அறுவை சிகிச்சைக்காக ஜெர்மனி சென்ற சூர்யகுமார் யாதவ்
சில நாட்களுக்கு முன்பு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சூர்யகுமார் யாதவ் அறுவை சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு சென்றதாக கூறியது. சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யா பொறுப்பேற்றார். அப்பொழுது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் கூட அவரால் விளையாட முடியவில்லை. அதன்பிறகு சூர்யகுமார் அறுவை சிகிச்சை ஜெர்மனி சென்றார். அத்தகைய சூழ்நிலையில், அவர் களத்திற்கு திரும்புவதற்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் கிரீன் சிக்னல் கட்டாயம் வேண்டும்.
தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்யும் சூர்யகுமார் யாதவ்
சமூக ஊடகங்களில் பயிற்சி செய்யும் சில வீடியோக்களை பகிர்ந்தார். எனினும், அவர் பேட்டிங் செய்யும் புகைப்படம் அல்லது வீடியோ எதுவும் வெளியாகவில்லை. அவர் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார். அதனால் தான் அவர் மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை.
சூர்யகுமார் யாதவின் ஐபிஎல் பயணம்
2012 ஐபிஎல் தொடரில் அறிமுகமான சூர்யகுமார் இதுவரை 139 போட்டிகளில் விளையாடி 32.17 சராசரியிலும் 143.32 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 3,249 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தனது பேட் மூலம் 1 சதம் மற்றும் 21 அரை சதங்கள் அடித்துள்ளார். அவர் 22 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 103 ரன்கள்.