கேப்டன்ஷிப்பில் ரோகித் பெஸ்ட், தோனி ரெண்டாவது இடம் தான் – முன்னாள் சிஎஸ்கே வீரர்

ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் பர்தீவ் படேல், கேப்டன்சியில் தோனியை விட ரோகித் சர்மா தான் சிறந்தவர் என பாராட்டியுள்ளார். தோனி கேப்டன்சியில் அதிக தவறுகளை காண முடியும் என தெரிவித்திருக்கும் அவர், ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பில் அதனை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது என கூறியுள்ளார். ரோகித் சர்மாவை பொறுத்தவரையில் போட்டியையும் சூழலையும் எளிமையாக்குவதை களத்தில் நடைமுறைப்படுத்துவதில் கில்லாடி, அதே பார்முலாவை தோனி விரும்புகிறார் என்றாலும் அவர் சரியாக அதனை களத்தில் நடைமுறைப்படுத்துவதில்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் பர்தீவ் படேல் பேசும்போது, ” ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில் சிறந்த கேப்டன், தவறுகள் செய்யாத கேப்டன் என்றால் அது ரோகித் தான். அவருடைய கேப்டன்ஷிப்பில் கடந்த 10 ஆண்டுகளில் நான் எந்த தவறையும் பார்த்ததில்லை. மாறாக தோனி கேப்டன்ஷிப்பில் கண்கூடாக நிறைய தவறுகளை உங்களால் பார்க்க முடியும். முக்கியமான இடங்களில் பவன் நேகி போன்ற அனுபவமில்லாத பந்துவீச்சாளர்களுக்கு பவுலிங் செய்ய தோனி எடுத்த முடிவுகள் தவறானது. இருவரும் ஐந்து ஐபிஎல் சாம்பியன் கோப்பைகளை வென்றிருந்தாலும் ரோகித் சர்மா தான் கேப்டன்ஷிப்பில் முன்னணியில் இருக்கிறார்.” என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 15வது தொடரில் தோனி களமிறங்க இருக்கும் நிலையில், ரோகித் சர்மா ஒரு பிளேயராக மட்டுமே ஆட இருக்கிறார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து இம்முறை அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், ஒரு பேட்ஸ்மேனாக இந்த சீசனை ஆட இருக்கிறார் ரோகித் சர்மா. அதேநேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கும் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடராகவும் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் விரைவில் அவர் 43வது வயதில் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.

இதனிடையே, ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22 ஆம் தேதி, அதாவது இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. அப்போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பாப் டூபிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அடுத்த ஷெட்யூல் ஐபிஎல் அட்டவணையில் இடம்பெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.