டெல்லி: ஒற்றை தலைவலியால் அவதிப்பட்டு வந்த ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு டெல்லி அப்பல்லோ மருத்துமனையில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, நலமுடன் இருப்பதாக ஈஷா யோகா அறக்கட்டளையின் சார்பில், ஜக்கி வாசுதேவின் எக்ஸ் தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்மைக் காலமாக அவருக்கு ஒற்றைத் தலைவலி இருந்ததாக கடந்த 4 தினங்களாக வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவரது மூளையில், ரத்தகசிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ஜக்கி வாசுதேவ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது நலமுடன் இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில், தனது தலையில் ஏதோ இருப்பதாக கூறிய மருத்துவர்கள், அதை அறுவை சிகிச்சையின் மூலம் திறந்து பார்த்தனர். அதன்பின்னர், தலையில் ஒன்றும் இல்லை என மருத்துவர்கள் கூறினர். அவர்களது அறுவை சிகிச்சையின் காரணமாக தற்போது நான் நலமாக இருக்கிறேன் என்று நகைச்சுவை உணர்வுடன் பேசியிருக்கிறார்.
கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ் விரைவில் நலம் பெற்றுத் திரும்ப பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தற்போது வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து ஈஷா அறக்கட்டளையினர் வெளியிட்ட அறிக்கையில்,‘‘ சில நாட்களுக்கு முன்னர் சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல்நிலையில், முன்னேற்றம் எதிர்பார்த்த விட சிறப்பாக உள்ளது. மருத்துவர்கள் கூறும்போது,‘சத்குரு எங்களால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளைத் தாண்டி தன்னைத் தானே அவர் குணப்படுத்திக் கொள்கிறார்’’ என்றனர். சூழ்நிலைகள் கடுமையாக இருந்த போதிலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாக சமாளிக்க முடியும் என்பதை சத்குரு நிரூபித்துக் காட்டுகிறார்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.
An Update from Sadhguru… https://t.co/ouy3vwypse pic.twitter.com/yg5tYXP1Yo
— Sadhguru (@SadhguruJV) March 20, 2024