Is M.J.T. being a parrot to sleep? | இலவு காத்த கிளியாகிறதா ம.ஜ.த.,?

கர்நாடக மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பா.ஜ., உடன் ம.ஜ.த., கூட்டணி அமைத்திருப்பதாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா முந்திக்கொண்டு அறிவித்தார்.

லோக்சபா நேரத்தில் தொகுதி பங்கீடு பற்றி பேசிக் கொள்ளலாம் என்று கருதி, ம.ஜ.த., தலைவர்களும் வேறுவழியில்லாமல் அதை ஆமோதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ம.ஜ.த., உடன் கூட்டணி அமைப்பது குறித்து, கர்நாடக மாநில பா.ஜ., தலைவர்கள் துவக்கத்தில் காட்டிய வேகத்தை, டில்லி மேலிடம் காட்டவில்லை; நிதானத்தையே கடைபிடித்தனர்.

தொகுதி பங்கீடு

ம.ஜ.த., உடனான கூட்டணி அறிவிப்பு குறித்தும், லோக்சபா தொகுதி பங்கீடு குறித்தும் டில்லியில் இருந்து இறுதி வரை எந்த ஒரு தெளிவான அறிவிப்பும் வெளியே வரவில்லை.

தேர்தல் நெருங்கிய வேளையில் கூட்டணியை உறுதி செய்வதில் ம.ஜ.த.,வின் உயர்மட்ட தலைவர்கள் தவியாய் தவித்தனர். ஆனால் இத்தகைய தவிப்பு பா.ஜ.,வில் இல்லை. காரணம் தொகுதி பங்கீடு.

கடந்த முறை வெற்றி பெற்ற எந்தத் தொகுதியையும் ம.ஜ.த.,வுக்கு விட்டுத் தர மாநில பா.ஜ., தலைவர்கள் தயாராக இல்லை. இதுதான், கூட்டணி பேச்சு சுமுகமாக இல்லாததற்கு காரணம். அத்துடன் தொகுதி பங்கீடு பேச்சில் ம.ஜ.த., தலைவர்களின் பிடிவாதத்தை, மேலிடமும் ரசிக்கவில்லை என்பது, அவர்களின் நடவடிக்கையில் தெரிந்தது.

பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க ம.ஜ.த., தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பாமல் இருந்ததை சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள், அக்கட்சிக்கு இறுதி வாய்ப்பு தர விரும்புவதை, பா.ஜ., மேலிடம் நாசுக்காக உணர்த்தி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதுவரை 20 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ள பா.ஜ., மேலிடம், கூட்டணி விஷயத்தில் தெளிவான பார்வையுடனே இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த லோக்சபா தேர்தலில் 27 தொகுதிகளில் தனித்து களமிறங்கிய பா.ஜ., 25 தொகுதிகளில் ஜெயித்து, மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

இதுவரை இல்லாத அளவு 51.7 சதவீத ஓட்டுகளைப் பெற்று, பெரும் வளர்ச்சி பெற்ற கட்சியாக திகழ்ந்தது.

அந்த தேர்தலில் காங்கிரஸ் 32.1 சதவீத ஓட்டுகளையும் ம.ஜ.த., வெறும் 9.7 சதவீத ஓட்டுகளையும் மட்டுமே பெற்றன. இரு கட்சிகளும் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றன.

முந்தைய தேர்தலை விட, தற்போது தங்களுக்கு கூடுதல் பலம் இருப்பதாகவே பா.ஜ., மாநிலத் தலைவர்கள் நம்புகின்றனர்.

மாநிலத்தில் ஆளும்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் அரசின் தோல்வியும், அக்கட்சியில் நிலவும் உட்கட்சிக் குழப்பங்களும் முதல்வர் பதவி போட்டியும் பா.ஜ.,வுக்கு பெரும் சாதகமாக இருக்கும் என்றே அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் மட்டுமல்லாமல், மேலிடமும் கணக்கு போடுகிறது.

தேவையில்லாத சுமை

இத்தகைய சாதகமான சூழ்நிலையில் ம.ஜ.த.,வுடன் கூட்டணி என்பது, தங்களுக்கு தேவையில்லாத சுமை என்றே பெரும்பாலான உள்ளூர் தலைவர்கள் கருதுகின்றனர்.

மேலும் கடந்த காலங்களில், பா.ஜ., ஆட்சிக்கு எதிராக, ம.ஜ.த.,வினர் செய்த துரோகத்தையும் உள்ளூர் பா.ஜ.,வினர் மறக்கவில்லை. இதனாலேயே ம.ஜ.த.,வுடன் நெருங்கி பழகுவதைத் தவிர்த்தே வந்தனர்.

எனவே, தேவையற்ற வீம்பு பிடிக்காமல் சுமுகமான பேச்சு நடத்தி, கூட்டணியை உறுதி செய்வதுதான் ம.ஜ.த.,வின் எதிர்காலத்துக்கு சிறந்ததாக இருக்கும். இல்லையென்றால் இலவுகாத்த கிளியின் கதை தான் அக்கட்சிக்கு ஏற்படும்.

— நமது நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.