லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் அதிருப்தி வெடித்துள்ளது தொடர்பாகவும், ம.ஜ.த., தொகுதி பங்கீடு குறித்தும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை புதுடில்லிக்கு வரவழைத்து, பா.ஜ., மேலிட தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
லோக்சபா தேர்தலில் போட்டியிட, கர்நாடகாவின் 20 தொகுதிகளுக்கு கடந்த வாரம் பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
9 எம்.பி.,க்கள்
இதில், சதானந்தகவுடா, கரடி சங்கண்ணா, நளின்குமார் கட்டீல், பிரதாப் சிம்ஹா உட்பட ஒன்பது எம்.பி.,க்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. இதனால், அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அதே வேளையில், உடுப்பி – சிக்கமகளூரு தொகுதி எம்.பி.,யாக இருக்கும் மத்திய விவசாய துறை இணை அமைச்சர் ஷோபாவுக்கு, கடும் எதிர்ப்பு இருந்தும், பெங்களூரு வடக்கு தொகுதியில் ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது. இது தான், அதிருப்தியாளர்களுக்கு ஆக்ரோஷத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இவர்களுடன், தன் மகன் காந்தேஷுக்கு ஹாவேரி சீட் தரப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, ஷிவமொகாவில் சுயேச்சையாக களமிறங்குவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அதிருப்தியில் உள்ள சதானந்தகவுடா, கரடி சங்கண்ணா, துமகூரில் வாய்ப்பு நழுவிய மாதுசாமி ஆகியோரை காங்கிரசார் தொடர்பு கொண்டு, இழுக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ம.ஜ.த., தொகுதிகள்
இதற்கிடையில், கூட்டணி கட்சியான ம.ஜ.த.,வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து, அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், அக்கட்சி தலைவர்கள் கவலையில் உள்ளனர்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பா.ஜ., பார்லிமென்ட் குழு உறுப்பினரும், மத்திய தேர்தல் குழு உறுப்பினருமான முன்னாள் முதல்வர் எடியூரப்பா, நேற்று அவசரமாக புதுடில்லி புறப்பட்டு சென்றார்.
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ் ஆகியோருடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்