இயக்குநர் அனுராக் காஷ்யப் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ எனத் தமிழ்ப் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். பாலிவுட் இயக்குநரான இவர், இனிமேல் சினிமா சம்பந்தமாகத் தன்னைச் சந்திக்க வருபவர்கள் பணம் கட்டினால் மட்டுமே தன்னிடம் உரையாட முடியும் என்று இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சினிமா சம்பந்தமாக என்னைச் சந்திக்கப் பலர் வருகின்றனர். புது முகங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சுமாரான படைப்புகளை ஊக்குவித்து விட்டேன். எனவே கிரியேட்டிவ் ஜீனியஸ் என்று நினைத்துக்கொண்டு வருபவர்களிடம் நான் இனி என் நேரத்தைச் செலவிட விரும்பவில்லை.
இனி 10 முதல் 15 நிமிடங்கள் சந்தித்து என்னுடன் பேச வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாயும், அரை மணி நேரம் என்றால் 2 லட்ச ரூபாயும் அதுவே ஒரு மணி நேரம் என்றால் 5 லட்சம் ரூபாயும் பணம் கொடுத்தால்தான் என்னிடம் பேச முடியும். இப்படியான சந்திப்புகளிலேயே என் நேரத்தை வீணடித்துவிட்டேன்.

அதனால் இனி உங்களால் இந்தப் பணத்தைக் கொடுக்க முடியும் என்றால் மட்டுமே என்னை அழையுங்கள். இல்லையென்றால் விலகி இருங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.
இவரின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.