புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 7 நாளில் அமலாக்கத் துறை காவலில் அனுப்ப நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து அமலாக்கத் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தன்னை உடனடியாக விடுவிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று மனுத்தாக்கல் செய்தார். அதில் தனது கைது நடவடிக்கை மற்றும் அமலாக்கத் துறை காவலில் அனுப்பியது சட்டவிரோதம் எனக் கூறியுள்ளார்.
தனது மனுவை, பொறுப்பு தலைமை நீதிபதி இன்று அவசர வழக்காக விசாரித்து தன்னை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவல் அதிகாரியை நீக்க மனு: டெல்லி நீதிமன்ற வளாக பாதுகாப்பு பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்ட காவல் துறை உதவி ஆணையர் ஏ.கே.சிங், அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆதரவாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதே அதிகாரி, இதற்கு முன் இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியாவை ஆஜர்படுத்தியபோதும் கடுமையாக நடந்து கொண்டதாக ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டது. அவரை பணியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும் என கேஜ்ரிவால் சார்பில், டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் உதவி ஆணையர் ஏ.கே.சிங் தனது ஆதரவாளர்களிடம் தேவையின்றி கடுமையாக நடந்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா நீதிமன்ற வளாகத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகளை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
பாஜகவினரை வெறுக்காதீர்கள்: அமலாக்கத் துறை காவலில் இருக்கும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அனுப்பியுள்ள கடிதத்தை, அவரது மனைவி சுனிதா காணொலி மூலம் பத்திரிகையாளர் சந்திப்பில் வாசித்து காட்டினார். அதில் கேஜ்ரிவால் கூறியிருப்பதாவது:
எனதருமை நாட்டு மக்களே, நான் கைது செய்யப்பட்டுள்ளேன். சிறையில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும், நான் நாட்டுக்கு தொடர்ந்து சேவை செய்வேன். எனது ஒட்டுமொத்த வாழ்வையும் நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளேன். வாழ்க்கையில் நிறைய போராடிவிட்டேன். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என எனக்கு தெரியும். அதனால், இந்த கைது என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை.
நான் சிறைக்கு செல்வதால், சமூக நலப் பணிகள் நின்றுவிடக் கூடாது என ஆம் ஆத்மி தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன். எனது கைது நடவடிக்கைக்காக பாஜகவினரை வெறுக்க வேண்டாம். அவர்கள் நமது சகோதர, சகோதரிகள்.நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும் சில சக்திகள் நாட்டை பலவீனமாக்கி கொண்டிருக்கின்றன. இந்த சக்திகளை அடையாளம் கண்டு தோற்கடிப்பதில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். என்னை எந்த சிறையிலும் நீண்ட காலம் வைத்திருக்க முடியாது.
நான் விரைவில் வெளியே வந்து, டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். எனக்கு கூட்டு பிரார்த்தனையின் பலத்தில் நம்பிக்கை உள்ளது. எனக்காக பெண்கள் கோயில்களில் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
கவிதாவுக்கு மேலும் 3 நாள் காவல்; உறவினர் வீடுகளில் சோதனை
ஹைதராபாத்: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவை கைது செய்து 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத் துறை, நேற்று அவரை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அப்போது கூடுதலாக 5 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை அனுமதி கோரியது. இதையடுத்து 3 நாட்களுக்கு மட்டும் அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் கவிதாவின் கணவர் அனில்குமாரின் உறவினர்களின் வீடுகளிலும் மாதபூரில் உள்ள அவரது சகோதரி அகிலாவின் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். மேலும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலையும் கவிதாவையும் ஒரே நேரத்தில் விசாரிக்க உள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.