உலகம் முழுக்க தம்பதியரிடையே உடலளவில் இருக்கிற ஒரு பிரச்னை விந்து முந்துதல். பலருடைய தாம்பத்திய உறவையும் சிக்கலாக்கிக் கொண்டிருப்பது இந்தப் பிரச்னைதான். இதற்கான தீர்வுகளை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த, பாலியல் மருத்துவர் காமராஜ்.
”உலகம் முழுக்க பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கிற முக்கியமான பிரச்னை விந்து முந்துதல்தான். இந்தப் பிரச்னை உலகம் முழுக்க 70 சதவிகித ஆண்களுக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட ஆரம்பித்த இரண்டே நிமிடங்களில் விந்து வெளியேறி விடும். இது சம்பந்தப்பட்ட ஆண்களை மட்டுமல்ல, அவர்களுடைய மனைவிகளையும் சேர்த்தே பாதிக்கும். எப்படித் தெரியுமா? கணவர்களைப் பொறுத்தவரை `உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டோம். என்றாலும் அது சீக்கிரமாக நிகழ்ந்துவிட்டதே’ என்று வருந்துவார்கள். தவிர, `தன்னால் மனைவியை திருப்திப்படுத்த இயலவில்லையே என்கிற குற்றவுணர்வும், தனக்கு முழுமையான ஆண்மை இல்லையோ என்கிற குழப்பமும் இருக்கும். மனைவிகளோ `இதுவரை உச்சக்கட்டமே அடையவில்லையே… வாழ்நாள் முழுக்க இப்படியேதான் இருக்குமோ’ என்று விரக்தியடைவார்கள்.

விந்து முந்துதல் ஒரு பிரச்னைதான் என்றாலும், இதைச் சரி செய்வதற்கான மருந்துகள் இருக்கின்றன. இந்தப் பிரச்னை இருந்தாலும் கணவன், மனைவி இருவருமே தாம்பத்திய உறவில் உச்சக்கட்டம் அடைவதற்கான சில வழிமுறைகளும் இருக்கின்றன” என்றவர், அவற்றை பற்றி பேச ஆரம்பித்தார்.
”விந்து வெளியே வரப்போகிற உணர்வு வந்தவுடன் ஆணுறுப்பை வெளியே எடுத்து, உறுப்பின் நுனியை அழுத்திவிட்டு மறுபடியும் உறவில் ஈடுபட ஆரம்பியுங்கள். விந்து முந்துதல் சற்று தள்ளிப்போகும். உறவின்போது இதை அடிக்கடிகூட செய்யலாம்.
உறவில் ஈடுபடும்போதே ஆழமாக மூச்சையிழுத்து நிறுத்தி 1,2,3,4,5,6 சொல்லி மெதுவாக மூச்சை வெளியே விடுங்கள். இதுவும் விந்து முந்துதலைத் தள்ளிப்போடும்.
கணவன் கீழேயும் மனைவி மேலேயும் இருந்தால் விந்து சீக்கிரம் வெளியே வராது.

விந்து முந்துதல் பிரச்னையில் அதிக பாதிப்பு மனைவிக்கே என்பதால், ஆணுறுப்புக்கு இணையான பெண்ணுறுப்பின் கிளிட்டோரிஸை தூண்டி மனைவியை முதலில் உச்சக்கட்டம் அடையச் செய்யுங்கள். அதன்பிறகு இரண்டு நிமிடங்களில் விந்து வெளிவந்தாலும் பிரச்னை இல்லை. ஏனென்றால் கணவன், மனைவி இருவருமே திருப்தியடைந்திருப்பார்கள். ஒருவேளை, விந்து முந்துதல் ஒரு நிமிடத்திலே நிகழ்ந்துவிட்டாலும், அதன்பிறகு கிளிட்டோரிஸை தூண்டி மனைவியை உச்சக்கட்டம் உணர வைக்கலாம். காதலும் காமமும் இனிமையான, முழுமையான அனுபவமாக இருக்க வேண்டியது அவசியம். இதைக் கணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார் டாக்டர் காமராஜ்.