காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேர்தலில் போட்டியிடவில்லை: மருமகனை களமிறக்கினார்

பெங்களூரு: காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவாரா? என கேள்வி எழுந்த நிலையில், அவரது சொந்த தொகுதியில் தன் மருமகனை களமிறக்கியுள்ளார்.

காங்கிரஸ் தேசியத் தலைவரும், இண்டியா கூட்டணியின் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே (81) கடந்த 1972ம் ஆண்டில் இருந்து 2008ம் ஆண்டுவரை நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் குல்பர்கா தொகுதியில் போட்டியிட்டார்.

கடந்த தேர்தலில் கார்கே தோல்வி அடைந்ததால், 2024 மக்களவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என குல்பர்கா தொகுதிவாசிகள் எதிர்ப்பார்த்தனர். அவரது ஆதரவாளர்களும் 6 மாதங்களுக்கு முன்பே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் அந்த தொகுதியில் கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ணா தொட்டமணிக்கு காங்கிரஸ் சார்பில் சீட் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வருகிற மக்களவைத் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து கார்கேவின் மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே கூறுகையில், ”இது கட்சி தேசிய தலைவர் என்ற முறையில் அவர் எடுத்த முடிவு. கர்நாடக காங்கிரஸார் அவரை போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அவர் கட்சியின் தலைவராகவும், கூட்டணியின் தலைவராகவும் இருக்கிறேன். எனவே நாடு முழுவதும் பயணித்து, தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டியுள்ளது என கூறினார். என் தந்தை (கார்கே) இப்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். எனவே நாடாளுமன்றத்தில் அவரது குரல் தொடர்ந்து ஒலிக்கும்”என்றார்.

கர்நாடகாவின் முக்கிய தலைவரான கார்கே தேர்தல் போட்டியில் இருந்து விலகியிருப்பது, காங்கிரஸாரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.