பிஹார் மக்களவைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஓரணியாகவும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிரணியாகவும் போட்டியிடுகின்றன.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில், 12 தொகுதிகளை காங்கிரஸ் கோருகிறது. ஆனால் 6 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கூறி வருகிறது. இரு கட்சிகளிடையே விரைவில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பிஹார் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான அஜித் சர்மா பாட்னாவில் நேற்று கூறியதாவது:
எனது மகள் நேகா சர்மா பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கிறார். வரும் மக்களவைத் தேர்தலில் பிஹாரின் பாகல்பூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த தொகுதியில் நேகா சர்மாவை களமிறக்க காங்கிரஸ் மாநில தலைமை விரும்புகிறது.
இதுதொடர்பாக எனது மகளிடம் செல்போனில் பேசினேன். அடுத்த 6 மாதங்கள் பல்வேறு திரைப்படம், நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர் ஒப்பந்தமாகி உள்ளார். இப்போதைக்கு என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது. அடுத்த தேர்தலில் போட்டியிட தயார் என நேகா உறுதி அளித்திருக்கிறார்.
இவ்வாறு அஜித் சர்மா தெரிவித்தார்.
இந்தி, தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 17 திரைப்படங்களில் நடிகை நேகா சர்மா நடித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் வெளியான சோலோ படத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து அவர் நடித்திருக்கிறார்.
பிஹாரில் ஆளும் பாஜக கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதால் நடிகை நேகா சர்மா களமிறக்கப்படலாம் என்று மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.