மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர், சந்தேஷ்காளி கிராமத்தில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நில அபகரிப்பு, பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டார் என கடந்த மாதம் பெரும் பிரச்னை வெடித்தது.

இதுதொடர்பாக, சந்தேஷ்காளி கிராமத்துப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட, 50 நாள்களாக தலைமறைவாக இருந்த ஷாஜகான் ஷேக்கை போலீஸார் கைதுசெய்தனர்.
இந்த விவகாரமானது, பிரதமர் மோடியே மேற்கு வங்கத்துக்கு வந்து சந்தேஷ்காளி கிராம பெண்கள் குழுவை நேரில் சந்தித்துப் பேசுமளவுக்கு, ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதேசமயம், `மணிப்பூரில் பழங்குடியினப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு கயவர் கூட்டம் வீதியில் இழுத்துச் சென்றபோது, பிரதமர் மோடிக்கு இவ்வளவு கோபமும் ஆத்திரமும் ஏன் வரவில்லை’ என்ற கேள்வியும் பலதரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டது.

இத்தகைய சூழலில், இதே சந்தேஷ்காளி விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்திருக்கும் பா.ஜ.க, சந்தேஷ்காளி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரும், மோடியை நேரில் சந்தித்த பெண்கள் குழுவில் ஒருவருமான ரேகா பத்ரா என்பவரை இந்த மக்களவைத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கியிருக்கிறது. இன்னும் பா.ஜ.க-வில் அதிகாரபூர்வமாக இணையாத ரேகா பத்ரா, பாசிர்ஹத் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ரேகா பத்ராவுக்கு எதிராக `ரேகாவை வேட்பாளராக நாங்கள் விரும்பவில்லை’, `ரேகா பத்ராவை பா.ஜ.க வேட்பாளராக நாங்கள் விரும்பவில்லை’ போன்ற சுவரொட்டிகளை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஒட்டியிருப்பதாக பா.ஜ.க குற்றம்சாட்டிவருகிறது. இருப்பினும், பா.ஜ.க-வின் இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துவருகிறது. இன்னொருபக்கம், `கடந்த காலத்தில் எங்கள் பகுதியிலிருந்து எம்.பி-யை பார்க்க முடியவில்லை. இப்போது எங்கள் கிராமத்திலிருந்து ஒரு எம்.பி-யை பெறலாம்’ என சந்தேஷ்காளி கிராமவாசிகள் கூறிவருகின்றனர்.