பா.ஜ.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஈரோடு தொகுதியில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் மற்றும் தூத்துக்குடி தொகுதியில் விஜயசீலன் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்குவார்கள் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துவந்த கதிர்வேல் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து வடக்கு மாவட்ட தலைவராக கோவில்பட்டி நகர தலைவர் கே.பி.ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், த.மா.கா-விலிருந்து விலகியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கதிர்வேல், “ஆரம்ப காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் சுமார் 50 ஆண்டுகளாக பயணித்து வந்தேன். பின்னர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கிய பின்பு ஜி.கே.வாசனுடன் அரசியலில் இணைந்து பயணித்து வந்தேன்.மேலும், நான் INTUC தொழிற்சங்கங்களுக்கு பொதுச்செயலாளராக இருந்து வருகிறேன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினை பொறுத்தவரையில் தோற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. கடந்த காலங்களில் மத்திய அமைச்சர் பதவி கொடுத்த காங்கிரஸ் கட்சி மற்றும் ராஜ்ய சபா எம்.பி., பதவி கொடுத்த அ.தி.மு.க-விற்கு துரோகம் செய்தவர் ஜி.கே.வாசன்.
அவரை உயர்த்தி பதவி கொடுத்த கட்சிகளுக்கு துரோகமே செய்து வருகிறார். இப்போது பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துள்ளார். எந்த தேர்தலாக இருந்தாலும் முன்னணி கட்சிகளிடம் கூட்டணி வைத்து த.மா.கா-விற்கு சீட் வாங்கி அதனை அதிக விலைக்கு விற்று வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு மக்கள் நல கூட்டணியில் பயணித்தபோது த.மா.கா., தரப்பில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் நான் போட்டியிட்டேன். அப்போது அந்த கூட்டணியில் த.மா.கா போட்டியிட்ட தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்றது நான்தான். அதனடிப்படையில் தற்போது தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டேன். ஆனால், அவர் தரவில்லை. வேறு காரணத்துக்காக வேறொருவருக்கு தந்துவிட்டார்.

எனக்கு சீட் கிடைக்கவில்லை என்பதற்காக த.மா.கா-விலிருந்து விலகவில்லை. கூட்டணி விஷயத்தில் அவரது நிலைப்பாடு, கூட்டணிக் கட்சிகளுடன் நடந்துகொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை. கட்சியிலிருந்து விலகியதற்கான காரணங்கள் குறித்து தபால் மூலம் தலைமைக்குத் தெரியப்படுத்தியது மட்டுமன்றி, தொலைபேசி மூலமாகவும் ஜி.கே.வாசனிடம் கட்சியில் பயணிக்க விருப்பம் இல்லை விலகிக் கொள்கின்றேன் எனக் கூறிவிட்டேன். ஜி.கே.வாசனைப் பொறுத்தவரையில் கூட்டணிக் கட்சிகளுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்” எனக் குற்றம்சாட்டினார்.