நாட்டில் தேங்காய் தண்ணீர் ஏற்றுமதியினால் 2024 பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 3,439 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின் பிரகாரம் கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் தேங்காய் தண்ணீர் ஏற்றுமதியினால் 2,705மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் 734 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தில் அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்தார்.
விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் நேற்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்விடயம் தெளிவுபடுத்தப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர வனவிலங்குகளினால் ஏற்படுத்தப்படும் சேதத்தினால் வருடாந்தம் ஏற்படும் 300 மில்லியன் அளவிலான தேங்காய்களின் நட்டத்தைத் தவிர்க்க முடியுமாயின் இதனை விட அதிக இலாபத்தை ஈட்டிக்கொள்வதுடன், அதன் ஊடாக தென்னைச் செய்கையாளர்களின் வருமானத்தை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.