இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம். இந்நிலையில் மிஸ் யுனிவர்ஸில் சவுதி அரேபியா முதன்முறையாக பங்கேற்கவுள்ளது மக்களிடையே கவனம்பெற்றுள்ளது. இது ஒரு வரலாற்று நிகழ்வு எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரூமி அல்கஹ்தானி எனும் அழகி தனது இன்ஸ்டா பக்கத்தில் இது குறித்த தகவலை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் ரியாத்தில் பிறந்தவர். ஏற்கெனவே பல அழகிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் நடந்த `மிஸ் அண்ட் மிஸஸ் குளோபல் ஏஷியன்’ என்ற அழகிப்போட்டியில் கலந்து கொண்டார். தனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உலகின் பிரபலமான போட்டி ஒன்றில் கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளவர், “மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் பங்கேற்பதில் நான் பெருமைப்படுகிறேன். மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபியா பங்கேற்பது இதுவே முதல்முறை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

2023-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை நிகரகுவா நாட்டைச் சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் வென்றார். மிஸ் யுனிவர்ஸ்க்கான அடுத்த நிகழ்ச்சி மெக்சிகோவில் நடைபெறுமென கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர்.